உலகப் பார்வை: 'ரோஹிஞ்சா முஸ்லிம் கிராமங்கள் அடியோடு அழிப்பு'

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

ரோஹிஞ்சாக்களின் கிராமங்கள் அடியோடு அழிப்பு

மியான்மரில் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டது செயற்கைகோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக பிரசார குழுவான 'ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்' தெரிவித்துள்ளது

ஏற்கனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 55 கிராமங்கள், புல்டோசர் கொண்டு அடியோடு அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் 'தேசிய பேரிடர்'

நைஜீரியாவில் டஜன்கணக்கான பள்ளிச் சிறுமிகள் போகோ ஹராம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விடயத்தை "தேசிய பேரிடராக" அந்நாட்டு அதிபர் முகமது புஹாரி அறிவித்துள்ளார்.

அந்நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள டாப்சி என்ற நகரிலுள்ள பள்ளியில் கடந்த திங்கட்கிழமையன்று புகுந்த தீவிரவாதிகள் எத்தனை மாணவிகளை கடத்தி சென்றனர் என்பது தெளிவாக அறியப்படவில்லை.

பிரெக்ஸிட் - "தூய மாயை"

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் எடுக்கும் அடுத்தகட்ட முயற்சிகள் அனைத்தும் "தூய மாயையை" போன்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டனின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து அந்நாட்டின் பிரதமரான தெரீசா மே வரும் வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலிய குண்டுவெடிப்பில் 18 பேர் பலி

சோமாலியாவின் தலைநகரான மொகதிஷூவில் நடந்த இரண்டு பெரிய குண்டு வெடிப்புகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.

முதல் குண்டுவெடிப்பு அதிபர் மாளிகையின் முகப்பிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு அந்நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு அருகிலும் நடந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :