காலிஸ்தான் ஆதரவாளருக்கு விடுத்த அழைப்பை திரும்பப் பெற்றது கனடா

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான விருந்தில் கலந்து கொள்ள சீக்கிய பிரிவினைவாதக் குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படும் ஜஸ்பால் அட்வாலுக்கு விடுத்த அழைப்பை கனடா திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ட்ரூடோ, "ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் எனினும் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் ஜஸ்பால் அட்வால், 1986ஆம் ஆண்டு இந்திய அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர்.

தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் சீக்கிய பிரிவினைவாத குழுவின் உறுப்பினராக அவர் இருந்தார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதற்கு முன்னதாக அவர் ட்ரூடோவின் மனைவி சோஃபியுடன் புகைப்படம் ஒன்றில் காணப்பட்டார்.

அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து தீவிரமாக தாங்கள் கருத்தில் கொள்வதாகவும், இந்த விஷயம் தங்களின் கவனத்திற்கு வந்தவுடன் அழைப்பை உடனடியாக திரும்பப் பெற்றுள்ளதாகவும், டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார் ட்ரூடோ.

இந்திய சுற்றுப்பயணம் வந்திருக்கும் ட்ரூடோ, சீக்கிய பிரிவினைவாத குழுவுடன் இலகுவான போக்கை கடைபிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தங்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் "இந்த அழைப்பிற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும்" அவர் தெரிவித்தார்.

கனடாவில் தொழிலதிபராக இருக்கும் ஜஸ்பால் அட்வால், தனியாக இந்தியா வந்துள்ளார். அவருக்கும் இந்தியா வந்த கனடா அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு விசா கிடைத்தது எப்படி என்று விசாரணை மேற்கொள்ளப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"தான் மும்பையில் இருப்பதால் கனடாவின் உயர் ஆணையரால் கொடுக்கப்படும் விருந்தில் கலந்துக் கொள்ள போவதில்லை" என கனடா ஊடகத்திடம் ஜஸ்பால் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் மல்கியாத் சிங் சித்து கனடாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது ஜஸ்பால் மற்றும் மேலும் மூவர் அவரை சுட முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

அமைச்சர் இரண்டு முறை தாக்கப்பட்டு உயிர் பிழைத்தார். பின்பு இந்தியாவில் 1991ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

தாக்குதலின் போது ஜஸ்பால் அட்வால் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்தார் என சிபிசி செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.பின்பு அது இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்டது.

முன்னதாக இந்தியா வந்த கனடா பிரதமர் சரியான முறையில் வரவேற்கப்படவில்லை என ஊகங்கள் இருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பெருமளவில் சீக்கியர்கள் வசிக்கின்றனர். கனடாவின் அமைச்சரவையில் நான்கு சீக்கிய அமைச்சர்கள் உள்ளனர்.

மேலும் காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுடன் இணக்கத்துடன் செயல்படுவதாக ட்ரூடோ நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ட்ரூடோ இந்திய வந்த ஒரு வாரத்திற்கு பிறகு மோதி அவரை இன்று சந்தித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :