பெண்களால் சொல்ல முடியாத, சொல்லப்படாத விடயங்களின் கலை வடிவம்

நாற்காலியின் கைப்பிடியில் ஒரு பெண் அமர்ந்திருப்பது போல் இன்ஸ்ட்ராகாமில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம் வித்தியாசமானதாக இருக்கிறது.

காவ்யா இளங்கோ என்ற கலைஞரால் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருக்கிறது.

மரியாதை குறைவானது என்று பொருள்படும் 'Dirty Tabooz' பற்றி காவ்யா இளங்கோவிடம் பிபிசி நிருபர் கிருத்திகா பேசினார். பொதுவாக பெண்கள் தொடர்பான பல விடயங்களைப் பற்றி பேசாமல் புறக்கணிக்கிறோம். ஆனால் காவ்யா அவற்றைப் பற்றி பேசுகிறார்.

"பொதுத்தளங்களில் கருத்துகளையோ, இயல்பையோ வெளிப்படுத்த வேண்டாம் என்றே பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளிப்படுத்த, விழிப்புணர்வூட்ட கலை மிகச் சிறந்த சாதனம் என்று நான் நம்புகிறேன்."

'நூற்றாண்டுகளாக தொடரும் பிரச்சனைகள்'

காவ்யா, சமூக ஊடக தளங்களில் தீவிரமான கருத்துகளையும் நையாண்டியாகவே சொல்லி பிறரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியடைந்துள்ளார்.

"பல நூற்றாண்டுகளாக தொடரும் பிரச்சனைகள்" பற்றி காவ்யா கேள்விகளை எழுப்புகிறார். தனது கலை உணர்வால் சமூக ஊடகங்களில் இருக்கும் பிறரிடம் இருந்து மாறுபட்டு தனித்துவமான கவனத்தைப் பெற்றிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அழகான புகைப்படங்கள், செல்ஃபிகள், வெளிநாட்டில் சுற்றுலா போன்ற வழக்கமான பதிவுகளிலிருந்து விலகி, அந்தரங்கமான மற்றும் கடினமான விடயங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த காவ்யா விரும்புகிறார்

அவருடைய பெரும்பாலான ஓவியங்களில் மாநிறமான பெண்கள், கைகள் மற்றும் கால்களில் முடியுடன் காணப்படுவார்கள்.

அழகு சாதன பொருட்கள் துறையும், ஏன் சமூக ஊடகங்கள்கூட, முன்வைக்கும் அழகு பற்றிய சிந்தனைகள் மற்றும் நம்பிக்கையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் காவ்யா.

'அருவருக்கத்தக்க' பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள்

ஒரு பெண்ணை ஓவியத்தின் மூலம் சித்தரிக்கிறார் காவ்யா. சிவப்பு கோடுகள் மூலம், அந்த பெண்ணின் உடலின் பல்வேறு உறுப்புகளை பற்றி குறிப்பிடுகிறார்.

அந்தப் பெண்ணின் தொடைகளின் இருக்கும் கோடுகள் கவனத்தை ஈர்க்கிறது. அதில் 'பிரசவத்தின் கோடுகள் கொண்ட தொடைகள்' என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதோடு கைகளை கீழே காட்டும் 'இமோஜி'யும் இருக்கிறது.

"அசுத்தமானது, வெட்கத்துக்கு உரியது என்று கூறப்படும் விடயங்களில் நியயமாகவும், அர்த்தமுள்ள உரையாடல்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். இதுபோன்ற முயற்சிகள், சமுதாயத்தில் விவாதத்தை எளிதாக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறுகிறார் காவ்யா.

'அருவருக்கத்தக்க படங்கள்' போன்றவற்றையும் சில சமயம் பதிவிடும் அவர், தனிமை, மனநோய், மன அழுத்தம் போன்ற மேலும் பல கடினமான பிரச்சனைகளையும் விட்டு வைப்பதில்லை.

சமூக ஊடகம்

"மனச்சோர்வு, மன அழுத்தம், தனிமை அல்லது அடிமைத்தனம் போன்ற விடயங்களில் நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை," என்கிறார் காவ்யா இளங்கோ.

#100daysofdirtylaundry என்ற ஹேஷ்டேகில் இதுபோன்ற பல பிரச்சனைகளை நியாயமாக அணுகி ஆராய்கிறார் காவ்யா.

"ஆரம்பத்தில், சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளை நையாண்டி செய்வதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது" என்கிறார் காவ்யா.

காவ்யாவின் படைப்புகளில் பெரும்பாலானவை நகைச்சுவையாக கேலி செய்யும் பகடிகள். ஆனால் இவை ஒரு தலைமுறையின் அசௌகரியத்தை உள்ளார்ந்து பேசுகிறது. "எப்பொழுதும் ஆன்லைனில் வாழும் தலைமுறை" என சுட்டிக்காட்டுகிறது.

மொபைல் போன்கள், சமூக ஊடகங்கள், வலைதளங்கள் என மாய வலைகளால் சூழப்பட்டிருப்பதை அவர் தனது படைப்புகளுக்கு வைக்கும் உணர்வுமிக்க தலைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

ஊடகமே பிரதானம்

"ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், பேசத் தவிர்த்து வந்த பல பிரச்சனைகளையும் எங்கள் தலைமுறையிலாவது தீர்க்க முடியுமா என்று நகைச்சுவை, பகடிகள், மீம்கள், நையாண்டி மற்றும் கேலி செய்யும் ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றின் மூலம் முயற்சிக்கிறேன்" என்கிறார் காவ்யா.

இந்தியாவின் பிரதான ஊடகங்கள் பின் தங்கியிருக்கின்றன என்று சொல்லும் காவ்யா, மன நோய் போன்ற முக்கிய பிரச்சனைகள் பற்றி சிக்கலான சிந்தனையே வெளிப்படுத்தப்படுகிறது என்று வருத்தப்படுகிறார்.

"பிரச்சனைகள் தேவைக்கு ஏற்ப முக்கியத்துவம் பெறுவதில்லை" என்று சொல்லும் காவ்யா இளங்கோ, தனது பணிக்கு சமூக ஊடகங்களை முக்கிய தளமாக பயன்படுத்துகிறார்.

ஆன்லைனில் இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் பல ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.

நேர்மறையான எதிர்வினை

"அங்கீகாரம் மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தும் சக்திவாய்ந்தது ஊடகம். பல குறைபாடுகள் இருந்தாலும்கூட, மாறுதல்களை ஊடகம் ஏற்படுத்தும்."

'வாழ்க்கையில் தவிர்க்கப்படும் பிற அம்சங்களில்' மட்டுமே ஏன் கவனம் செலுத்துகிறாய் என்று தன்னிடம் கேள்வி எழுப்பப்படுவதாக காவ்யா கூறுகிறார். இருந்தபோதிலும், தனது பதிவுகளுக்கு கிடைக்கும் எதிர்வினைகளில் பெரும்பாலானவை நேர்மறையானதாகவே இருப்பதாகவும் கூறுகிறார்.

"எனக்கு அறிமுகமில்லாத பலர் என்னிடம் பேசும்போது, என்னுடைய படங்களுடன் தங்களை இணைத்து பார்க்க முடிவதாக சொல்கிறார்கள். இதன் மூலம் பெரும்பாலும் பலர் அனுபவிக்கும் உணர்ச்சிகள் ஒன்றுபோலவே இருப்பதை உணர்வதாக சொல்கிறார்கள்," என்கிறார் காவ்யா இளங்கோ.

சமூக ஊடகங்களில் கலை படைப்புகள் மூலம் பேசப்படாத, பேச அருவருக்கப்படும் விடயங்களை பேச வேண்டும் என்ற மாற்றத்திற்கான பாதையை தொடங்கி வைத்திருக்கிறார் காவ்யா இளங்கோ.

தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :