You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசிரியர் - மாணவர் மோதல்: ஹார்மோன்கள் காரணமா?
- எழுதியவர், ஷாலினி
- பதவி, மனநல மருத்துவர்
(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
பதின்ம வயது எல்லா விதத்திலும் இரண்டும் கெட்டான் வயதுதான். இருபாலினருக்குமே இது பொருந்தும் என்றாலும் ஆண்களுக்கு இருக்கும் அவஸ்தை விசித்திரமானது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது மாதிரியே நடந்துக்கொள்வார்கள். ஆனாலும் உண்மையில் எதுவும் பெரிதாக தெரியாது.
வெளிதோற்றத்திற்கு ரொம்ப தெனாவட்டாய் முறைப்பாய் இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் கூச்சமும் சுயபரிகாசமும் மென்று தின்றுக்கொண்டிருக்கும். யாரையும் மதிக்காத மாதிரி நடந்துக்கொள்வார்கள். ஆனால் யாராவது நம்மை புரிந்துக்கொண்டு, அன்புகாட்ட மாட்டார்களா என்று உள்ளுக்குள் ஏங்குவார்கள். இப்படி வெளியில் வறண்ட பாலைவனம் போல இருக்கும் வாலிபன், உண்மையில் அன்பெனும் தூரல் லேசாகப்பட்டாலும் அப்போதே மலர்ந்திட தயாராக இருக்கும் ஒரு மெல்லிய கொடி என்று யாராலும் அனுமானிக்கவே முடியாது.
இளம்பெண்களை எளிதாக கையாளும் ஆசிரியர்களாலும் ஆண்களை சுலபத்தில் கையாள முடிவதில்லை. காரணம், ஆண்களை பற்றிய அடிப்படை புரிதல் நம்மில் பலருக்கு இல்லை. பெண் குழந்தையை அவமானப்படுத்துவதுபோல பேசி திட்டினால் அதற்கு மேல் பொறுப்பாய் நடந்துக்கொள்ள குறைந்த அளவு வாய்ப்பாவது உண்டு. ஆனால் ஆணை அவமதித்து அவன் மான உணர்வை தூண்டினால், அவன் எதிரில் இருப்பது யார் என்று நிதானிக்காமல் உடனே தாக்க முற்பட்டுவிடுவான். சில இளைஞர்களைப் பொறுத்தவரை, இந்த தாக்குதல் உந்துதல் தோன்றினாலும் அதை தணித்துக்கொள்ள முடியும். ஆனால் எல்லோருக்குமே இது சாத்தியம் இல்லை.
அது ஏன் அப்படி? அடிப்படையிலிருந்து வருவோம். மனித பெண் மூளையின் பிரதான ஹார்மோன்கள் (1) ஈஸ்றஜன் - அது அவளை நிதானிக்க தூண்டுகிறது, மொழி வளத்தை தூண்டுகிறது. (2) பிரஜெஸ்டிரோன் - இது அவளை பொறுப்புள்ளவளாக்குகிறது. (3) ஆக்சிடோஸின் - சமூக சாமர்த்தியம் தருகிறது. இப்படி மொழி கூர்மையும் ஒப்புறவு ஒழுகும் நேக்கும் இயல்பாக அமைந்த பெண்கள் படிப்பில் கெட்டிக்காரிகளாய் இருப்பதோடு, ஆசிரியரின் முகத்தைப் பார்த்தே அவரை எப்படி கையாள்வது என்று முடிவெடுத்துவிடுவார்கள்.
இதற்கு நேர்மாறாய் வயதிற்கு வரும் தருவாயில் இருக்கும் ஆணின் மூளையில் வியாபித்திருக்கும் ஹார்மோன்கள், (1)டெஸ்டோஸ்டிரோன் - ஏகக் குறிகோலாய் வேட்டையாடவும், பிறரைவிட தான்தான் உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளவும், ஆதிக்கம் செய்யவும், யோசிக்காமல் ரிஸ்க் எடுக்கவும், ஆக்ரோஷத்தை அதிகரிக்கவும், கலவி வேட்கையை தூண்டுவும் செய்கிறது இந்த ஹார்மோன் (2) ஆன்றோஸ்டீண்டையோன்- இது காம உணர்வுகளை தூண்டும், கவன சிதறல் ஏற்படுத்தும்.
இந்த ஆடவர் ஹார்மோன்கள் மிக நுணுக்கமான மாற்றங்களை அவனது இன்னும் முதிராத மூளையில் ஏற்படுத்துகின்றன. அதிக தூக்கம், எதற்கும் ஒரு அலுப்பு, எதிலுமே ஈடுபாடில்லாத மந்த நிலை, வேட்டை மற்றும் அதன் பரிணாம மாதிரிகளான போர், விளையாட்டு மாதிரியான சமாசாரங்களின் மீது மட்டுமே இயல்பான ஆர்வம் இருக்கும். மற்ற அனைத்திலும் ஏனோ தானோ என்கிற மெத்தனபோக்கே மேலோங்கி இருக்கும். தன்னை யாராவது அதட்டினால் பணிந்துபோக மறுத்து, மாறாக எகிறி தாக்கும் தன்மையும் இப்போது அதிகம்.
இந்த நார்மலான ஹார்மோன்கள் படுத்தும்பாடு போதாதென்று பருவ வயதில் கூடுதலாய் சில மனநல கோளாறுகளும் ஆரம்பமாகும் அபாயமுள்ளது. மனசோர்வு, பதட்டம், சமூக அச்சம், மனச்சிதைவு, போதைப் பழக்கம், ஓசிடி, பைபோலார் மாதிரியான கோளாறுகள் ஏற்பட மரபணு சாத்தியகூறு இருப்பின் அவை தாக்குதலை ஏற்படுத்தும் காலமும் இந்த பதின் பருவம்தான்.
அது போக, அந்த ஆணின் குடும்ப சூழலும் இதில் மிக முக்கியமானது. அன்பும் அறமும் உள்ள வீடா அல்லது உணர்வு பக்குவமற்ற வீடா என்பதை பொறுத்து அந்த மாணவனின் மனநிலையும் வேறுபடும்.
இப்படிப் பல காரணிகளால் கொதிநிலையில் இருக்கும் மாணவனை ஆசிரியர் எப்படிக் கையாண்டால் சரிபடும்? ஏய், நீ எல்லாம் எதுக்கு படிக்க வர்ற? என்று அவமானப்படுத்துவது போல பேசினாலோ, தேர்வு தாளில் பெரிய முட்டை போட்டு எல்லோரும் பார்க்கும்படி பரிகாசித்தாலோ, தண்டனைகளை கொடுத்து திருத்த முயன்றாலோ "எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கீட்டாங்களே!" என்று பெரும் existential அவஸ்தைக்கு உள்ளாகிறான் ஆண்.
அவனுடைய இயலாமை "இனி இழக்க எதுவுமில்லை" என்ற நிலையை எட்டும்போது, தன் மீது இருக்கும் கோபத்தைக்கூட பிறர் மீது காட்டி, முன்யோசனையே இல்லாமல் அழிவு ஏற்படுத்தும்படி ஆக்ரோஷபட்டுவிடுகிறான் ஆண்.
பெண்ணை விடவும் ஆண் ஒரு மிக சக்திவாய்ந்த ஆக்க சக்தி. ஆதனால் தான் அந்த சக்தியை மிகவும் பக்குவமாய் கையாள வேண்டியுள்ளது. ஆண்களைக் கையாளும்போது அவசியம் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:
எப்போதும் அவனைக் கௌரவமாகவே நடத்த வேண்டும். அவனை அவமானப்படுத்தவே கூடாது.
அவனை நெருக்கடி செய்து நச்சு பண்ணாமல், "உனக்கு தெரியாதது இல்லை, ஏன் செய்யல? இனிமே சரியா செய்திடு" என்று மன்னிப்பு கேட்க நிர்பந்திக்காமல், அவமானகரமான தணடனைகளைத் தராமல் லாவகமாய் திருத்தத்தை நோக்கி நகர்த்துங்கள்.
'நை நை' என்று முழம் முழமாய் பேசி அவன் பொறுமையை சோதிக்காதீர். அவனுக்கு இருப்பதே ஒரு சின்னூண்டு மொழி மையம்தாம். ரொம்பவும் அதிகமாய் பெனாத்தினால் அவன் மூளை மொத்தத்தையுமே கவனிக்காமல் கோட்டைவிடும். அதனால் திருக்குறள் மாதிரி ஏழெட்டு வார்த்தைகளுக்கு மிகாமல் சுருக்கமாய் பேசுவது மிக முக்கியம்.
கேலியாய், தோழமையாய், செல்லமாய் பேசினால் மட்டுமே அவன் கவனத்தை தக்கவைக்க முடியும். ரொம்பவும் சீரியஸாய் மொக்கை போட்டால் அவனுக்கு எப்படியும் ஒன்றும் உறைக்காது.
அன்புதான் அவனை அடக்கவல்ல ஒரே அங்குசம். அவன் தாயாய், தோழியாய், விசிறியாய் இருந்தால் நீங்கள் சொல்லும் அத்தனையும் செய்து முடிப்பான்.
தண்டனைகள் அவனை மேலும் முரடனாக்கி விடும். எல்லா தண்டனைகளையும் நிறுத்திவிட்டு அவனை மென்மையாக கையாளுங்கள்.
அவனுக்கு ஏதாவது வரவில்லை, குறைபாடு இருந்தால் அவனை பிறர் எதிரில் விட்டுக்கொடுக்காமல் தாங்கி பிடியுங்கள். பிறகு தனிமையில் நாசுக்காய் புரியவையுங்கள்.
ஆணின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அவன் காரணம் அல்ல. ஒரு பெரிய வேட்டுவ மூளையை வைத்துக்கொண்டு பள்ளிப் பாடம் படிப்பது சற்றே அபத்தமான நடவடிக்கைதான். அதிலும் மொழி வளம் இயல்பிலேயே மிகுந்த பெண் மாணவியரோடு போட்டியிடுவது அநியாயமான தேர்வு முறை.
பாவம் அந்த ஆண் மாணவன், எப்படியோ பொருந்திப்போக பெரும்பாடுபடுகிறான். அவன் அவஸ்தையை புரிந்துக்கொண்டு அவனுடைய பதின்பருவ மூளையை அன்பால் அரவணைத்து பேணி பராமரித்து அவனை சான்றோன் ஆக்குவது நாம் எல்லோரும் செய்ய வேண்டிய முக்கியமான சமூக பணி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :