You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திசைவழி தெரியாமல் நிற்கும் தமிழ் சினிமா: ஏன்... எப்படி?
க்யூப், யுஎஃப்ஓ போன்ற டிஜிட்டல் திரையிடும் நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதால் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடப்போவதில்லையென தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு என்ன தீர்வு?
தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரம் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 2000-ங்களின் துவக்கத்திலிருந்தே ஃபில்ம் ரோல்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகமாகின.
க்யூப், யு.எஃப்.ஓ போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்துடன்கூடிய புரொஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவின.
தற்போது தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய திரையரங்குகளைத் தவிர, பிற திரையரங்குகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில்தான் படங்களைத் திரையிட்டுவருகின்றன.
இதனால், மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்கள் பலவும் பெரிய வளர்ச்சி கண்டுள்ளன.
குறிப்பாக ஒரு நிறுவனம், இந்தியா முழுவதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் தனது டிஜிட்டல் புரொஜெக்டர்களை நிறுவியுள்ளது.
முன்பு, ஃபில்ம் ரோல்களின் மூலம் படத்தைத் திரையிட்டபோது, எத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறதோ அத்தனை பிரிண்டுகளை ஃபில்மில் எடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், தற்போதைய டிஜிட்டல் முறையில் ஹார்ட் டிஸ்க்கில் படம் சேமிக்கப்பட்டு திரையிடப்படுவதால் ஃபில்ம் ரோல்களுக்கான செலவு தயாரிப்பாளர்களுக்கு மிச்சமாகிறது.
"ஆனால், ஃபிலிம் ரோல் முறையே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த டிஜிட்டல் முறையில் தயாரிப்பாளர்களுக்கு செலவு அதிகரித்திருக்கிறது" என்கிறார் ஒரு தயாரிப்பாளர். இதுதான் பிரச்சனையின் மையம்.
இந்த டிஜிட்டல் முறையில் ஒரு திரைப்படம் வெளியாகும்போது அதை ஒரு வாரத்திற்கு தாங்கள் சொல்லும் தியேட்டரில் திரையிடுவதற்கு (வெள்ளி முதல் அடுத்த வியாழன் வரை) அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தத் திரைப்படம் எத்தனை வாரங்களுக்கு ஓடுகிறதோ, அத்தனை வாரங்களுக்கு கட்டணம் இருக்கும். ஆனால், சற்று குறைந்துகொண்டே வரும்.
இதற்குப் பதிலாக, 'லைஃப்' என்ற முறையில் படத்தைத் திரையிட்டால், அதாவது அந்த திரைப்படம் வெளியாகி, திரையரங்கில் இருந்து எடுக்கப்படும் வரை என்று ஒப்பந்தம் செய்துகொண்டால், 34 ஆயிரம் ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக மிகப் பெரிய தொகையை ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், தற்போது பிரதானமாக உள்ள க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனங்கள் தங்கள் வாடகைத் தொகையைக் குறைக்க வேண்டுமென பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கியூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட தற்போதைய முன்னணி நிறுவனங்களுக்குப் பதிலாக, கட்டணங்களைக் குறைவாக வசூலிக்கும் புதிய நிறுவனத்தை அறிமுகப்படுத்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முயன்றுவருகின்றன.
இந்தப் புதிய நிறுவனங்கள் 'லைப்' முறைக்கு 12 ஆயிரமும், வார முறை திரையிடலுக்கு அதிகபட்சம் 4 ஆயிரம் மட்டுமே வசூலிப்போம் என உறுதி அளித்ததாகத் தெரிகிறது.
இருந்தபோதும் ஏற்கனவே க்யூப், யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே திரையரங்குகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தங்கள் புரொஜெக்டர்களை பொறுத்தியிருப்பதால், புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தங்களுடைய புரொஜெக்டர்களை தற்போது பொருத்த முடியாத சூழல் உள்ளது.
இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால், அந்த காலகட்டம் முடியும் வரை வேறு நிறுவனங்கள் தங்கள் புரொஜெக்டர்களை இந்தத் திரையரங்குகளில் பொருத்த முடியாது.
இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் தாங்களும் இணைந்துகொள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் முடிவுசெய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இதனால் மார்ச் 1ம் தேதி முதல் எந்த திரைப்படமும் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில கியூப் நிறுவனத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 8ம் தேதி தென்னிந்திய திரைப்பட சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் அவர்கள் வைத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பும் இடைவேளையின்போதும் திரையிடப்படும் விளம்பரங்கள் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஒரு திரைப்படத்திற்கு 8 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை வெளியிட வேண்டுமெனவும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தங்களுடைய திரைப்படங்கள் திரையிடப்படுவதால் மட்டுமே விளம்பரங்களை வெளியிட முடிவதால், அதன் வருவாயிலும் தங்களுக்கு குறிப்பிட்ட சதவீத பங்கு தேவை என்கின்றனர் அவர்கள்.
ஆனால், இதற்கு டிஜிட்டல் நிறுவனங்களும் திரையரங்குகளும் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த விவகாரம் குறித்து திரையரங்க உரிமையாளரான ஸ்ரீதரிடம் கேட்டபோது, "க்யூப் நிறுவனம் தங்களுடைய புரொஜெக்டர்களை திரையரங்குகளில் இலவசமாக வைத்துக்கொள்கின்றனர்.
இதனால் விளம்பர படங்களின் வருமானம் அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு விளம்பர படங்களின் மூலம் வரும் வருமானத்தில் திரையரங்குகளுக்கு 40 சதவீதம் வருமானம் கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தம் பதினைந்து ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள் என திரையரங்கிற்கு ஏற்றார்போல் கையெழுத்தாகியுள்ளது.
ஆனால் நவீன தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் அதற்கான கருவிகளையும் அல்லது புரொஜெக்டர்களையும் மாற்றும்போது புதிய ஒப்பந்தம் செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் கியூப் நிறுவனத்துடன் தங்களுடைய ஒப்பந்தமானது நீண்டுகொண்டே செல்கிறது" என்று தெரிவித்தார்.
ஒப்பந்தம் முடிவடைவதற்குள் வேறு நிறுவனங்களின் புரொஜெக்டர்களை தாங்கள் பொருத்தினால், பழைய நிறுவனத்திற்கு நஷ்ட ஈடுகொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது திரையரங்க உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் ஸ்ரீதர்.
இப்படி ஒவ்வொரு தரப்பும் தங்கள் பக்கத்து நியாயங்களில் பிடிவாதமாக உள்ள நிலையில், மார்ச் 1ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்