You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறப்பு வழிபாட்டுமுறை: பிரபலங்களும் வரிசையில் வர வேண்டுமா?
சாதாரண பக்தர்களுக்கும் தரிசனம் கிடைக்க பிரபலங்கள் கோயிலுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்கவேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த கருத்து ஏற்புடையதா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு, நமது நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
மாதவ ராமன் இவ்வாறாக கருத்து தெரிவித்துள்ளார், "துணை குடியரசு தலைவர் திருவாளர் வெங்கய்ய நாயுடு அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நியாயமானவை. முக்கியஸ்தர்கள் வந்து விடும் பட்சத்தில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களை ஆலய நிர்வாகம் மணிக்கணக்கில் காக்கவைத்து மன உளைச்சல் ஏற்படுத்தி விடுகிறது.துணை குடியரசு தலைவரின் இந்த கருத்து ஏற்புடையது. பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே தரிசன முறை தேவை என்பதும் சரியானதுதான்."
"இயற்கையை விஞ்சியப் பேராற்றல் எவரிடத்துமில்லை என்றாலும் அவ்வியற்கை இறைவனென்ற பரம்பொருளால் இயக்கப்படுவதாயின், இப்பேரண்ட பேராற்றலை இயக்கும் ஒருவருக்கான இடம் கோயிலென்றால் அங்கே அவரை விடுத்து மற்றவர் யாவரும் சிறியவரே, சமமானவரே என்பதை ஆன்மீகம் பின்பற்றுவோர் பாகுபாடின்றி ஏற்று உணர்ந்து பணம், பதவி, அதிகாரம், பிரபலம் போன்ற புற போர்வையை விடுத்து பொதுவில் நின்று வழிபட வேண்டும். குறிப்பிட்டொருக்கு முன்னுரிமை, முதன்மைப்படுத்துதல், சிறப்பு சலுகை, வழி, வழிபாடு போன்ற முறையைப் பொதுவுடைமையான கோயில்களில் தவிர்க்க அரசு வழிவகுக்க வேண்டும்." என்பது சக்தி சரவணனின் கருத்து.
"நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படி பேசுவதற்கு வெட்கபட வேண்டும்.அனைவருக்கும் சமமான வாய்ப்பு இல்லை என்பதை ஒப்புகொள்வதில் மகிழ்ச்சி..கல்வியிலும் வேலையிலும் செல்வந்தர்கள் விலகிச் செல்ல வலிவுறுத்துவாரா?" என்று கேள்வி எழுப்புகிறார் செந்தில்.
புலிவலம் பாட்ஷா சொல்கிறார், "இறைவனுக்கு முன்னால் அனைவரும் சமமே,மனிதர்கள் ஆகிய நாம் தான் பிரிவினைகளை உண்டாக்கிக்கொள்கிறோம்."
முத்துசெல்வத்தின் கருத்து: "அவர்களை சாதாரணமாக வரிசையில் வர சொல்லுங்கள் அவர்களுக்காக மற்றவர்கள் தரிசனத்தை தடுப்பது சரியல்ல. ஒருத்தர்க்காக பலரை நிறுத்திவைப்பது தவறானது."
"அந்தக் காலத்தில் சாதி பார்த்து சாமியை தூரத்தில் வைத்தார்கள், இந்தக் காலத்தில் காசு பார்த்து சாமியை தூரத்தில் வைத்திருக்கிறார்கள். சாமி முன்னால் கூட மக்கள் அனைவரும் சமம் இல்லை என்றால் வேதனையாய் இருக்கிறது." என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
ஜி சுப்பிரமணியன், "பிரபலங்கள் நினைத்தால், எளியவர்களை போன்று யாருக்கும் இடையூறு இல்லாமல் சாமி கும்பிட முடியுமே." என்கிறார்.
ட்விட்டரில் வெங்கடேசன், "மக்கள் சேவையே மகேசன் சேவை. எனவே மக்களுக்கு தேவையா ஒகி புயல் நிவாரணம் மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சம்பளம் உடனடியாக கொடுப்பது, தங்கள் சம்பளத்தை குறைத்து கொள்வது இவை எல்லாம் மகேசன் சேவை."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்