You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கார்ப்பொரேட் ஜல்லிக்கட்டுக்கு விளையாட்டு அமைப்பு எதிர்ப்பு
தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ராஜேஷ் சென்னை கார்ப்பொரேட் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
''ஜல்லிக்கட்டு எனும் தமிழர்களின் பாரம்பரிய இறைவழிபாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் சிலரின் தவறான புரிதல் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி பத்து வருடங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு கடந்த 2014 மே மாதம் தடை செய்யப்பட்டதை அனைவரும் அறிவோம்.
இதனை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டு காணாத புரட்சியாக உலகத் தமிழர்கள் அனைவரும் போராடி பெற்றுத்தந்த ஜல்லிக்கட்டின் வெற்றியை கொண்டாடி மகிழ்ச்சியடைந்து வரும் நேரத்தில் வரும் 07ஆம் தேதி சென்னையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டினை நடத்துவது தமிழரின் பாரம்பரியத்துக்கு இழுக்கானது," என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு என்பது இதுவரையிலும் ஊர்த் திருவிழாக்களில் ஒரு அங்கமாக கருப்பண்ண சுவாமி ஜல்லிக்கட்டு, புனித அந்தோணியார் ஜல்லிக்கட்டு, இஸ்லாமியர்களால் நடத்தப்படும் பிரான்மலை சந்தனக்கூடு ஜல்லிக்கட்டு என ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தெய்வங்களின் பெயர்களால் நடத்தப்பட்ட ஒரு பாரம்பரிய நிகழ்வாகும் என்றும்,
இதனை ஒரு விளையாட்டாக பாவித்து கார்ப்பரேட் கம்பெனிகளின் பெயரில் ''பூர்வீகா ஜல்லிக்கட்டு'' என பெயர் வைத்து நடத்துவது தமிழர்களின் பாரம்பரிய முறைக்கு மாறான செயல். ஆகவே , இது போன்ற பாரம்பரியத்தை சிதைக்கும் நிகழ்வுகளை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இனி வரும் காலங்களில் தமிழக அரசு இதனை முழு கவனத்தில் கொண்டு கிராமப் பொதுமக்கள் தவிர, வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் எவரேனும் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டாக பாவித்து நடத்துவதை அரசு தடை செய்ய வேண்டும் '' என அந்த அறிக்கையில் டி.ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார் .
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்