You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தடைபடும் தங்க மங்கையின் வெற்றிப் பயணம்
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் பெண்களின் ஆர்வமும் எண்ணிக்கையும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
அதற்கு அவர்கள் கடக்க வேண்டிய தடைகள் ஏராளம். குடும்ப சூழ்நிலை, உடல் இடையூறுகள், சமூக கட்டமைப்பு போன்ற காரணங்களால் திறமையுள்ள வீராங்கனைகள் கூட சாதிக்க முடியாமல் போகிறது. பல இடையூறுகளை சமாளித்து இத்துறையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு, தனது குடும்ப பொருளாதார சூழ்நிலை முட்டுக்கட்டையாகிவிடுகிறது.
திறமை இருந்தும் வசதிகள் இல்லையென்றவுடன் வரும் வாய்ப்புகளும் தட்டிச்செல்கின்றன. ஆனால் என்றோ ஒரு நாள், அனைத்தும் கைகூடும் என்ற நம்பிக்கையில் விடாமுயற்சியும் பயிற்சியும் எடுத்து வருகின்றனர் சிலர். அதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி ஐஸ்வர்யா.
திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே சைக்கிள் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யாவிற்கு, இவரது தந்தை ஜெயராமன்தான் பக்கபலம். ஊக்கத்தை கொடுக்க முடிந்த தந்தைக்கு, தனது மகளின் கனவை நிறைவேற்றப் போதுமான வசதி இல்லை.
பால் வியாபாரியாக இருந்த ஜெயராமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஒரு விபத்தால், அவரது கால்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தற்போது மாலை நேரங்களில் பானிபூரி வியாபாரம் செய்து குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார். மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழும் ஜெயராமனுக்கு தினசரி செலவை சமாளிப்பதே பெரிய சவாலாக அமைகிறது. ஆனால் தன் மகளின் ஆசையை நிறைவேற்ற இதுவரை மனம் தளராமல் போராடுகிறார்.
முறையான பயிற்சிகள் இல்லாத போதிலும், சிறிய அளவிலான சைக்கிள் பந்தய போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு தன்னை மெருகேற்றிக்கொண்ட ஐஸ்வர்யாவிற்கு அதன் பிறகு வெற்றிகள் குவிந்தன. மகளிருக்கான போட்டிகள் என்று மட்டும் அல்லாமல், தமிழகத்தில் ஓபன் பிரிவு போட்டிகள் எங்கு நடந்தாலும், ஆர்வத்துடன் சென்று கலந்துகொள்வார். கடந்த ஐந்து வருடங்களாக கலந்து கொண்ட மாநில அளவிலான சைக்கிள் பந்தய போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆறு வருடங்களாக தனது அயராத உழைப்பை கொடுத்த ஐஸ்வர்யாவிற்கு அவரது குடும்ப பொருளாதார சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. அவரது முதல் தேசிய அளவிலான போட்டியில் தரமான சைக்கிள் இல்லாத காரணத்தினால், தனது போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினார். ஆனால் இவரது திறமையை கண்ட திருச்சியில் உள்ள சமூக அமைப்புகளும், அவரது பள்ளி நிர்வாகமும் இணைந்து ஜெர்மனியில் இருந்து கார்பன் சைக்கிளை இறக்குமதி செய்து தந்தனர்.
அடுத்த வருடம் கலந்துக்கொண்ட தேசிய அளவிலான போட்டியில் 8வது இடத்தை பிடித்தார் ஐஸ்வர்யா. அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்கிற பெருமையும் இவரைச் சேரும்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் ஐஸ்வர்யா கூறுகையில் "நான் வைத்துள்ள கியர் சைக்கிள் வாங்கி மூன்று வருடம் ஆகிறது. இந்த மூன்று வருடத்தில் நான் வளர்ந்து விட்டதால் சைக்கிள் உயரம் போதவில்லை. இப்போது எனது உயரத்திற்கு தேவையான சைக்கிள் இருந்தால் தேசிய அளவிலான போட்டிகளிலும் கண்டிப்பாக பதக்கம் வெல்லுவேன். என்னுடன் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பிற மாநில சக போட்டியாளர்கள் பயிற்சி முகாமுக்கு சென்று தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடன் இந்த சைக்கிளை வைத்து போட்டியிடுவது ரொம்பவே கஷ்டமாக உள்ளது", என்றார்.
ஐஸ்வர்யாவின் பள்ளி விளையாட்டு ஆசிரியை சிவகாமி கூறுகையில் "ஐஸ்வர்யா பதக்கங்கள் வெல்வது மிகவும் பெருமையாக உள்ளது. SEFI எனும் பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்தும் விளையாட்டு போட்டிகளில் அனைத்து மாநிலத்தை சேர்ந்த சைக்கிளிங் விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்வர். இந்தப் போட்டிக்கென, ரோட்டரி சைக்கிளிங் அஸோஸியேஷனும் தமிழக அரசும் சேர்ந்து தமிழக சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் அவர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
மேலும் சைக்கிளிங் வீரர்களுக்கு ரயில்வேயில் மட்டுமே வேலை வாய்ப்பு உள்ளது. மற்ற போட்டிகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை இந்த போட்டிக்கும் அளிக்க வேண்டும்," என்றார்.
தனது மகள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகவும், அதற்காக அவருக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்ததாகவும் முதன் முதலில் அண்ணா நூற்றாண்டு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றதாகவும் அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்று வருவதாகவும் பெருமை பொங்கக் கூறுகிறார் ஐஸ்வர்யாவின் தந்தை ஜெயராமன்.
மேலும் "போதிய பயிற்சியும், உபகரணங்களும் இல்லாததால் தேசிய அளவில் கலந்து கொண்டு எனது மகள் பதக்கம் வெல்ல முடியாமல் தோற்றுவிட்டாள். மற்ற மாநிலங்களில் சைக்கிளிங் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். போட்டி துவங்க ஒரு மாதம் முன்பே அந்நந்த மாநில அரசுகளே முகாம் அமைத்து பயிற்சியும், முறைப்படுத்தப்பட்ட உணவும் வழங்குகிறார்கள். அதே போல தமிழக அரசும் செய்தால் நிச்சயம் என் மகள் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார்" என்கிறார் நம்பிக்கையோடு.
விளையாட்டில் ஆர்வம் உள்ள இளம் தலைமுறைக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :