You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் போன மீனவர்கள்; தொடரும் போராட்டங்கள்
ஒக்கி புயலின்போது மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் கடற்கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் 20க்கும் மேற்பட்ட கப்பல்களும் 3 விமானங்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
ஒக்கி புயலின் போது காணாமல் போன மீனவர்களை விரைவில் தேடிக் கண்டுபிடிக்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் துறையில் நேற்றும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் 513 மீனவர்கள் கரை திரும்பவில்லையென மீனவர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஊடகங்களிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், 13 வல்லங்களில் சென்ற 35 மீனவர்கள், 43 விசைப்படகுகளில் சென்ற 427 மீனவர்கள் என மொத்தமாக 462 பேர் இதுவரை கரை திரும்பவில்லையெனக் கூறினார்.
காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரியும் இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கக்கோரியும் நீரோடியிலிருந்தும் வள்ளிவிளையில் இருந்தும் மார்த்தாண்டம் துறைக்கும் அமைதிப் பேரணியாக வந்த மீனவர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னத்துறையிலும் இரவிபுத்தன் துறையிலும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீனவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், டிசம்பர் 11ஆம் தேதியன்று காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான 23 கப்பல்களும் 3 டோர்னியர் விமானங்களும் 1 ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, லட்சத் தீவு, மினிகாய் தீவுகளின் கடற்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்தத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியிலிருந்து கோவா வரையிலான 930 கிலோ மீட்டர் தூரமுள்ள கடற்பகுதியில் இந்த தேடுதல் பணிகள் நடத்தப்படுவதாகவும் கடற்கரையிலிருந்து கடலுக்கு 555 கி.மீ. தூரம்வரை கப்பல்கள் - விமானங்களை ஒருங்கிணைத்து இந்தத் தடுதல் பணிகள் நடத்தப்படுவதாகவும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
டிசம்பர் பத்தாம் தேதியன்று நடைபெற்ற தேடுதல் பணியில் கொச்சிக்கு வடமேற்கே 32 கி.மீ. தூரத்தில் சங்கல்ப் கப்பல் ஒரு உடலை மீட்டுள்ளதாகவும் அதேதினத்தில் ஆழிகோடுக்கு வடமேற்கே 45 கி.மீ. தூரத்தில் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. கொச்சிக்கு 278 கி.மீ. தூரத்தில் ஒரு உடலை சமர் கப்பல் மீட்டது.
டிசம்பர் 11ஆம் தேதியன்று ஆதேஷ் என்ற கப்பலும் வைபவ் என்ற கப்பலும் தேடுதல் பணிகளைத் துவங்கியுள்ளன. இதில் வைபவ் கப்பலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் தேடுதல் பணியில் உதவுவதற்காக பயணம் செய்துவருகின்றனர். வைபவ் கப்பல் தற்போது கன்னியாகுமரிக்கு தென்மேற்கில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்