You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முஸ்லிமாக இருந்ததுதான் ராஜஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட அஃப்ரசூல் செய்த தவறா?
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
பெரிய பாத்திரங்களில் சமைத்துக்கொண்டிருந்த மண் அடுப்பு அணைந்து கிடக்கிறது. மறு பக்கம் பெரிய கடாயில் கொஞ்சம் எள் இருக்கிறது. இந்த இடத்தில் பலருக்கு உணவு சமைக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. சமைத்து வைக்கப்பட்ட ரொட்டிகள் சாப்பிடுதற்காக காத்திருக்கின்றன.
அறையில் உள்ள பழைய தொலைக்காட்சி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அறையின் தரையில் கணக்கு தாள்களும், கால்குலேட்டரும் கிடக்கின்றன.
அறையின் வெளியே, அவரசத்தில் விட்டுச் செல்லப்பட்ட டஜன் கணக்கான காலணிகள் கிடக்கின்றன.
இதுதான் ராஜஸ்தான் மாநிலத்தில் 'லவ் ஜிஹாத்' எனக் கூறப்படும் விவகாரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட மொஹம்மத் அஃப்ரசூலின் அறை.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தை அஃப்ரசூல், ராஜஸ்தானின் ராஜச்மன்ட் பகுதியில் வேலை செய்துவந்தார்.
உறவினர் இனாமுல், மருமகன் முஷாரஃப் ஷேக் மற்றும் வங்காள தொழிலாளர்களுடன் அஃப்ரசூல் வசித்துவந்தார்.
அஃப்ரசூல் எரித்துக்கொல்லப்பட்ட காணொளியை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அவரது அபயகுரலையும் கேட்டிருப்பீர்கள்.
இவருடன் தங்கியிருந்த தொழிலாளர்கள் தற்போது மேற்கு வங்கத்திற்குத் திரும்ப சென்றுவிட்டனர். சிலர் இந்த நகரத்தில் வேறு இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அஃப்ரசூல் தங்கியிந்த வீட்டின் உரிமையாளர் பண்டிட் கெம்ராஜ் பாலிவாலின் கண்கள் கண்ணீரில் மூழ்யிருக்கிறது. ரொம்ப நல்ல மனிதருக்கு இந்த மோசமான விஷயம் நடந்திருக்கக் கூடாது என அவர் கூறுகிறார்.
மிகவும் நல்லவர்
ஆட்டோ ஓட்டுநர் ராம்லால், அஃப்ரசூலையும் அவருடன் பணியாற்றும் தொழிலாளர்களையும் கடந்த ஒன்பது பத்து வருடங்களாக அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குத் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுவந்துள்ளார்.
அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் எப்போதும் தேநீர் குடிப்பார் என்கிறார் ராம்லால். அஃப்ரசூல் கொல்லப்பட்ட காணொளியை பார்க்கும் தைரியம் ராம்லாலுக்கு இல்லை.
கூலி வேலை பார்ப்பதற்காக 12-13 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து ராஜச்மன்ட்டிற்கு வந்தவர் அஃப்ரசூல்.
இந்த 13 வருடத்தில் தொழிலாளரில் இருந்து ஒப்பந்ததாரராக உயர்ந்த அஃப்ரசூல், சாலைப் போடும் பணிகளைச் செய்ய தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன்பு புதிய வங்கிக்கணக்கு
786 என்ற எண்கள் நம்பர் ப்ளேட்டில் இருக்கும் இருசக்கர வண்டியை அஃப்ரசூல் வாங்கினார். அவருடன் எரிந்துபோன 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய ஸ்மார்ட்போனை அவர் சமீபத்தில் வாங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு புதிய வங்கிக்கணக்கை தொடங்கினார். அதன் ஏ.டி.எம் கார்டு இன்னமும் தபாலில் இருந்து பிரிக்கப்படாமல் உள்ளது.
அஃப்ரசூலில் மூன்று மகள்களில் இருவருக்குத் திருமணமாகியுள்ளது. மூத்த மருமகன் முஷாரப் இவருடன் வசித்துவந்தார்.
அஃப்ரசூல் உடனான தனது கடைசி நாள் பற்றி முஷாரப் நினைவு கூர்கிறார். ''செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் வேலையைப் பாதியிலே நிறுத்திவிட்டோம். புதன்கிழமையன்றும் மழை தொடர்ந்ததால் நாங்கள் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் இருந்த இரண்டு தொழிலாளர்கள் சமைத்த உணவை எல்லோரும் சாப்பிட்டோம்'' என்கிறார்.
மேலும் அவர்,'' தேநீர் குடிக்க செல்வதாகக் கூறி, பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினார். தொழிளார்களுக்கு பணத்தைக் கொடு, சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேன்'' என்றார்.
''11.30 மணிக்கு எனக்குப் போன் செய்த அவர், இப்படி நாள் முழுக்க தூங்கிக்கொண்டிருந்தால் எப்போது தொழிலாளர்களுக்கு பணத்தைக் கொடுப்பாய் என கேட்டார். பத்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்றார். ஆனால், அவர் திரும்ப வரவே இல்லை'' என்கிறார் முஷாரப்.
விபத்து என போன் வந்தது
அஃப்ரசூல் விபத்தில் சிக்கிவிட்டதாக மதிய வேளையில் முஷாரப்பிற்கு போன் வந்தது.
சம்பவ இடத்திற்கு முஷாரப் சென்றபோது அவரது உணர்வுகள் மிகவும் அதிகரித்தது.''அவரை பார்த்து நான் அழுதேன். எனக்கு எதுவும் புரியவில்லை. நானும் இறந்துவிட்டதாகத் தோன்றியது'' என்கிறார்.
அஃப்ரசூலின் மரணக் காணொளியை பார்த்ததில் இருந்து, முஷாரப்பால் எதையும் சாப்பிட முடியவில்லை. அஃப்ரசூல் உடன் வசித்த தொழிலாளர்கள் இங்கு வசிக்க முடியாமல் வேறு இடத்திற்குச் செல்கின்றனர்.
''வயிற்றை நிரப்புதற்காக இங்கு வந்திருக்கும் தொழிலாளர்கள் நாங்கள். ரூ.8-10 ஆயிரம் சம்பாதிக்கிறோம். இந்தியர்கள் இந்தியாவின் எல்லா பகுதியிலும் பணியாற்றலாம். இது போன்ற சம்பவங்களை அரசு தடுக்காவிட்டால் எங்களால் எப்படி பணியாற்ற முடியும்'' என அஃப்ரசூலின் உறவினர் இனாமுல் கூறுகிறார்.
''வயிற்றுப் பசிக்காக குடும்பத்தைப் பிரிந்து வந்து வேலை செய்கிறோம். மற்றவர்களை விட சிறப்பாகவும் வேகமாகவும், குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றுகிறோம். பாதுகாப்பு இல்லாதபோது எங்களால் எப்படி பணியாற்ற முடியும்'' என்கிறார் இனாமுல்.
நாங்கள் பலவீனமானவர்கள்.. எங்களால் என்ன செய்ய முடியும்?
காணொளியைப் பார்த்த பிறகு என்ன விதமான உணர்வு தோன்றியது என கேட்டபோது அவர் கூறினார்,'' நாங்கள் உதவியற்றவர்கள், பலவீனமானவர்கள் எங்களால் என்ன செய்ய முடியும்? கொலையாளியை அரசு தூக்கிலிட்டால் மட்டுமே எங்களால் நிம்மதியாக இருக்க முடியும். கொலையாளிக்கு ஜாமீன் கிடைத்தால் எங்களால் எதையும் செய்ய முடியாது'' என கூறுகிறார் இனாமுல்.
''கொலையாளிக்கு மனதில் இரக்கமே இல்லை. காணொளியைப் பார்த்தபிறகு எங்களால் இரவில் தூங்க முடியவில்லை. எப்படி ஒருவரால் இதுபோன்ற மோசமான செயலை செய்ய முடிகிறது?'' என கேட்கிறார் அஃப்ரசூல் உடன் பணியாற்றிய பரக்கத் அலி.
அஃப்ரசூல் ஏன் கொல்லப்பட்டார். பரக்கத் அலி, இனாமுல் மற்றும் முஷாரப் ஆகியோரின் புரிதல்படி, 'லவ் ஜிஹாத்' என்ற வார்த்தை அவர்களுக்கு புதியது.
''ஆயிரம் கிலோ மீட்டாருக்கு மேல் கடந்து வந்து பணியாற்றும் எங்களுக்கு, பசியை தவிர வேறு எதையும் யோசித்துப் பார்ப்பது சாத்தியமில்லாதது'' என்கிறார் பரக்கத் அலி.
அஃப்ரசூலுக்கு ஏதேனும் பெண்ணுடன் தொடர்பு இருந்ததா? என கேட்ட போது, இப்படி யோசிப்பதே குற்றம் என்கிறார் அவர்.
பிறகு அஃப்ரசூல் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என கேட்டபோது,'' அந்த கொலையாளிக்கு யாரையாவது கொல்ல வேண்டும். அந்த நேரத்தில் அஃப்ரசூல் மாட்டிக்கொண்டார். நான் சிக்கியிருந்தால் நானும் கொல்லப்பட்டிருப்பேன்'' என்கிறார்.
''சம்பு லால் செய்தது தவறு. ஏதேனும் பிரச்சனை என்றால் அவர் போலீஸிடம் சென்றிருக்க வேண்டும்'' என்று ராஜச்மன்ட் பகுதியில் சில இளைஞர்கள் கூறுகின்றனர்.
''ஒருவேளை அஃப்ரசூல் தவறே செய்திருந்தாலும், இப்படி கொலை செய்யச் சம்பு லாலுக்கு யார் உரிமை கொடுத்தது'' என ஒரு உள்ளூர் இளைஞர் கூறுகிறார்.
''யாரேனும் ஒருவர் தவறு செய்தால் அதைக் கேட்க போலீஸ் இருக்கிறது. சட்டம் இருக்கிறது. சட்டத்தை கையில் எடுக்க என்ன அவசியம் இருக்கிறது '' என அஃப்ரசூல் தங்கியிந்த வீட்டின் உரிமையாளர் பண்டிட் கெம்ராஜ் பாலிவாலின் பி.ஏ படிக்கும் மகள் கேட்கிறார்.
ஆனால், அஃப்ரசூல் செய்த தவறு என்ன? ''அவர் ஒரு தொழிலாளி, அவர் ஒரு முஸ்லிம்'' என்கிறார் இனாமுல்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்