You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாணவி தற்கொலை: சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
சென்னைக்கு அருகில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து, மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகம் ஜனவரி 2ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் சோழிங்க நல்லூரில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கிறது சத்யபாமா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியலில் தகவல் தொழில்நுட்பம் படித்துவந்த 19 வயது மாணவியான துப்ரு ராக மோனிகாவின் உடல் தூக்கிலிட்ட நிலையில் விடுதி அறையில் இருந்து புதன்கிழமை மீட்கப்பட்டது. இவர் ஹைதராபாதைச் சேர்ந்தவர்.
பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அவர் தேர்விலிருந்து வெளியேற்றப்பட்டார். தேர்வை முடித்துவிட்டு, பிற மாணவர்கள் விடுதிக்குத் திரும்பியபோது, விடுதி அறையில் அவரது உடல் தூக்கிலிட்ட நிலையில் காணப்பட்டது.
அவருடைய சகோதரரும் இதே பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார். தான் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு தொடர்பாக ராக மோனிகா தன் சகோதரருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து மாலையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளேயும் சில மாணவர்கள் கூடி, நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாலை 7.30 மணிக்குப் பிறகு, சில விடுதி மாணவர்கள் போர்வை, தலையணை, பேப்பர்கள் ஆகியவற்றை விடுதி முன்பாகக் குவித்து தீ வைத்து எரித்தனர். இந்தத் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், சில மாணவர்கள் பேருந்தை தாக்கும் காட்சிகளும் மாணவர்கள் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டன.
மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக அவருடைய தந்தை ராஜா ரெட்டி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். உடற்கூறு சோதனைக்குப் பிறகு ராகமோனிகாவின் உடல் அவருடைய சொந்த ஊரான ஹைதராபாதிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மாணவர்களின் போராட்டம், தீ வைப்பு சம்பவங்களையடுத்து பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 2ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்துவந்த செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் விடுதிகளைக் காலிசெய்துவிட்டு, ஜனவரி மாதம் திரும்ப வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வரவில்லை. ஊடங்கள் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கவும்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்