You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் பள்ளிக்கூட புதிய பாடத்திட்ட வரைவு வெளியீட்டில் தாமதமா?
தமிழ்நாட்டில் ஒன்று முதல் பன்னிரெண்டு வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டங்களை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அடுத்த கல்வியாண்டு துவங்க சில மாதங்களே இருக்கும் நிலையில், பாடத்திட்ட வரைவு உரிய காலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பள்ளிக்கூடங்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படாமல் இருந்த நிலையில், கே.ஏ. செங்கோட்டையன் கல்வியமைச்சராக பதவியேற்று உதயசந்திரன் கல்வித் துறை செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, புதிய பள்ளிக்கூடங்களுக்கு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மே மாதம் 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கல்வியாளர் எம். அனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய கலைத்திட்டக் குழு உருவாக்கப்பட்டு, பெற்றோர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன.
இதற்கிடையில், பள்ளிக்கல்வித் துறையின் செயலராக இருந்த உதயசந்திரன் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டார். இதை எதிர்த்து சிலர் வழக்குகள் தொடர்ந்த நிலையில், பாடத்திட்ட மாற்றத்தை மட்டும் கவனிக்கும் வகையில் அவரை செயலராகத் தொடரச் செய்த அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு புதிய முதன்மைச் செயலரை நியமித்தது.
இந்த நிலையில், வரைவுப் பாடத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டிருக்கிறார். பனிரெண்டு வகுப்புகளுக்குமான பாடத்திட்டம் தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான இணைய தளத்தில் விரைவில் இந்த வரைவு கிடைக்குமென்றும் இதற்குப் பிறகு பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் பெறப்பட்டு பாடத்திட்டம் இறுதிசெய்யப்படுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுமென தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.
1,6,9,11ஆம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டங்களுடன் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நிலையில், அறிவித்தபடி பாடத்திட்ட வரைவை அக்டோபர் 20ஆம் தேதியே வெளியிடாமல், ஒரு மாதம் தாமதமாக நவம்பர் 20ஆம் தேதி வெளியிட்டிருப்பதால், பொதுமக்கள், கல்வியாளர்கள் முழுமையாக படித்துப் பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இனி பாடத்திட்டத்தை இறுதிசெய்து, புதிய நூல்களை அச்சடிக்க ஏற்படும் காலத்தை மனதில்கொண்டால், பள்ளி துவங்கி ஒரு மாதத்திற்கு மாணவர்கள் புத்தகங்கள் இல்லாமல் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
உதயசந்திரனை பாடத்திட்டப் பணிகளில் இருந்து விலக்கி வைத்ததுதான் தாமதத்திற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், நேர நெருக்கடி இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாலும் அரசு விரைந்து செயல்பட்டால், உரிய காலத்தில் புத்தகத்தை அச்சிட்டுவிட முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
"ஏற்கனவே பல முறை மிகப் பெரிய அளவில் கலந்துரையாடல் கூட்டங்கள் நடந்துவிட்டன. இதற்கு மேலும் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் இந்த பத்து நாட்களுக்குள் அதைச் சொல்ல முடியும். இல்லாவிட்டால் கால அவகாசம் பெற முடியும்" என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இந்த ஆண்டு நான்கு வகுப்புகளுக்கு மட்டுமே மாற்றப்பட்ட பாடத்திட்டத்தோடு புத்தகங்கள் வழங்கப்படும் என்பதால், உரிய காலத்தில் புத்தகங்களை அரசால் அச்சிட்டுவழங்கிவிட முடியும் என்கிறார் கஜேந்திரபாபு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்