You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு கமல் ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல் ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
இந்த நிதி வழங்கும் நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசும்போது, "ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்குமுன் கமல் ஹாசன் அவர்கள் உலகத் தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார்."
"இன்று, குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் 20 லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம் என்பது அவர் கருத்து," எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோரும் உடனிருந்தனர்.
அமெரிக்காவின் மாஸச்சூஸட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமான ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை ஏற்படுத்துவதற்கு கடந்த மூன்றாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகமெங்கும் 7,102 மொழிகள் பேசப்படும் நிலையில், அதில் தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், ஹீப்ரு, சீன மற்றும் கிரேக்கம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழிகளாக உள்ளன.
அந்த ஏழு மொழிகளில் தமிழை தவிர்த்து மற்ற ஆறு மொழிகளுக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளன.
ஹார்வர்டில் ஒரு மொழிக்கு இருக்கை எனப்படும் ஆராய்ச்சித் துறையை அமைக்க வேண்டுமென்றால், அந்த பல்கலைக்கழகம் வரையறுத்துள்ள இலக்கிய வளமை, தொன்மை மற்றும் நடுநிலைத் தன்மை போன்ற 11 அடிப்படைத் தகுதிகளில் பெரும்பாலானவற்றை நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், மற்ற 6 மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே அனைத்து 11 அடிப்படைத் தகுதிகளையும் நிரூபித்துள்ளதாக ஹார்வர்ட் தமிழ் இருக்கை குழு தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறையில் "சங்கம் தமிழ் சேர்" (Sangam Tamil Chair) என்ற பெயரில் இந்த இருக்கை உருவாக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்