You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'குழந்தைகள் நலன் கருவிலிருந்தே துவங்க வேண்டும்'
(சென்னையிலிருந்து இயங்கும் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர். தேவநேயன் நம் நாட்டின் குழந்தைகள் நிலை குறித்து அலசுகிறார். குழந்தைகள் தினத்தையொட்டி இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
குழலினிது, யாழினிது என்பார் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்கிறார் வள்ளுவர். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கின்றன பழமொழிகள். இப்படியெல்லாம் குழந்தைகளைப் போற்றினாலும் இங்கு குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாவும் வளர்க்கப்படுகிறார்களா? 18 வயதுவரையுள்ளவர்கள் குழந்தைகள் என ஐ.நா. சபை வரையறுக்கிறது. அந்த வகையில் இந்திய மக்கள் தொகையில், 45 சதவீதம் குழந்தைகள் என்று வைத்துக்கொண்டால், சுமார் 50-55 கோடி குழந்தைகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கரு உருவான நாள் முதல் 18 வயது நிறையும்வரை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் என்பன, கருக்கொலை தொடங்கி, குழந்தைத் திருமணம் வரை நீண்டுகொண்டே போகிறது.
உதாரணமாக, பத்தாம் வகுப்பில் தோல்வியுறும் குழந்தைகளையும் சரியாகப் படிக்காத குழந்தைகளையும் குற்றம்சாட்டும் நாம் அதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வுசெய்வதில்லை. எளிதில் குழந்தைகளைக் குற்றவாளியாக்கும் செயல்கள்தான் நம் சமூகத்தில் மிகுந்து இருக்கிறது. கருவுற்ற தாய்க்கு சத்தான சரிவிகித உணவும் ஆரோக்கியமான சூழலும் ஆரம்பகால பராமரிப்புக்கு அவசியமாந தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால், இன்று 64 சதவீத தாய்மார்கள் ரத்தசோகையில் வாழ்ந்துகொண்டிருக்கையில் பிறக்கும் குழந்தை சத்தற்ற குழந்தையாக இருப்பது மட்டுமல்லாமல், முழு மூளை வளர்ச்சியடையாத குழந்தையாகவும் உள்ளது. இதனால், குழந்தை உள்வாங்கும் திறன் குறைந்து, மிகவும் மெதுவாக கற்கக்கூடிய குழந்தையாக மாறிவிடுகிறது. அதனால்தான் எட்டாம் வகுப்பில் பத்தாம் வகுப்பில் பாடம் பயிலாமல், தோல்வியைத் தழுவுவதும் கற்றல் குறைபாடு உடையவர்களுமாக மாறுகிறார்கள்.
இதன் மூலம், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் ஆரம்பகால பராமரிப்பிற்காக இயங்கும் துறையின் வாயிலாக இயங்கும் ஆரம்பகால பராமரிப்பு மையங்கள் அந்த அளவுக்கு அதன் நோக்கத்தை உறுதிசெய்யவில்லை.
முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 2012ல் இது குறித்துப் பேசும்போது, நம் நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள், சத்தற்ற குழந்தைகளாக உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் வந்த பன்னாட்டு அமைப்பின் ஆய்வுகளின்படி, உலக அளவில் சத்தற்ற குழந்தைகள் வாழும் ஆப்பிரிக்க நாட்டைப் பின்தள்ளி, இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
ஆனால், அரசு எதையும் கவனத்தில் கொள்ளாமல் குழந்தைகளின் ஆரம்பகால கவனிப்பின் முக்கியத்துவத்தை மறந்து, இதற்கென ஒதுக்கப்பட்டுவரும் நிதியைக் குறைத்துவருவது கவலைக்குரிய செய்தி. அடித்தல், உதைத்தல், திட்டுதல், வன்முறைசெய்தல் ஆகியவற்றை மட்டுமே நாம் குழந்தைகள் உரிமை மீறலாக நாம் பல நேரங்களில் பார்க்கிறோம். குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய சத்தான உணவு கிடைக்காமல் போவதும் மறுக்கப்படுவதும் ஒரு உரிமை மீறலே என்பதை உணர்வதில்லை.
நல்ல ஆரோக்கியமான நாட்டை உருவாக்குவதற்கு அடிப்படை ஆரம்பகால குழந்தைகள் பராமரிப்பும் பாதுகாப்பும்தான் என்பதைக் கருத்தில்கொண்டு அதனை உறுதிசெய்யும் துறைக்கு உரிய நிதியையும் சரியான கட்டமைப்பையும் தேவையான பணியாளர்களையும் அளிப்பதே இந்த குழந்தைகள் தினத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பணியாகும்.
பிற செய்திகள்:
- குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 8 வயது சிறுவன்
- 'லட்சுமி' குறும்படம் மீதான கடும் விமர்சனங்கள் - குறுகிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடா?
- இரான்-இராக் நிலநடுக்கம்: 400-க்கும் மேற்பட்டோர் பலி
- ''செளதியில் சுதந்திரமாக இருக்கிறேன்; ஓரிரு நாட்களில் நாடு திரும்புவேன்''
- குஜராத் தேர்தல்: "இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை"
- களியாட்டக் களமான ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்