You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முஸ்லிம் மதகுருவைத் துருக்கியிடம் ஒப்படைக்க டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பணம் பெற்றாரா?
முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் பிளின்னும் அவரது மகனும் துருக்கி நாட்டுப் பிரதிநிதிகளுடன் இணைந்து, கூறப்படும் திட்டம் குறித்து விவாதித்ததாக என்பிசி நியூஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாகக் கூறப்படுவது குறித்த பரந்த நீதி விசாரணையின் கீழ், இந்த விஷயமும் கண்காணிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வசித்து வந்த ஃபெதுல்லா குலென், துருக்கியில் கடந்த வருடம் தோல்வியில் முடிந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னணியில் இருந்தவர் என துருக்கி குற்றஞ்சாட்டுகிறது.
ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதற்குப் போடப்பட்டதாக கூறப்படும் திட்டத்தை, 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் சிஐஏ இயக்குநர் ஜேம்ஸ் வூல்சே வெளிப்படுத்தினார்.
துருக்கி அதிபர் ரெசீப் தையிப் எர்துவானின் பிரதான அரசியல் எதிரியாக ஃபெதுல்லா குலென் கருதப்படுகிறார். அவரை அமெரிக்கா துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என எர்துவான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
நியூயார்கில் டிசம்பர் மாத மத்தியில் மைக்கேல் பிளின் மற்றும் துருக்கி அதிகாரிகள் இடையே நடந்த சந்திப்பை மையமாக வைத்துச் சிறப்பு ஆலோசகரான ராபர்ட் மல்லரின் விசாரணை நடைபெறுவதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியுள்ளது.
ஃபெதுல்லா குலென் துருக்கியின் இம்ராளி தீவில் உள்ள சிறைக்கு தனி விமானத்தில் அனுப்புவது குறித்து மைக்கேல் பிளின் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இக்குற்றச்சாட்டு குறித்து பிபிசி கேட்ட கருத்துக்கு மைக்கேல் பிளினின் வழக்கறிஞர் உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஆனால், முன்பு பிளின் நிறுவனத்தின் செய்தி தொடர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
டிரம்பின் ஆலோசகர்களில் முதல்முதலாக பதவி விலகியவர் மைக்கேல் பிளின். பதவியேற்ற வெறும் 23 நாட்களில் இவர் பதவி விலகினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்