You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூய்மை இந்தியா திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய 'ரோபோ'
750 சதுர அடி பரப்பளவை 15 நிமிடங்களுக்கும் மேல் சுத்தம் செய்த 45 ரோபோக்களை உருவாக்கி ’ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ சென்னை ஐஐடி மாணவர்கள்இடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை ஐஐடியின் ’செண்டர் ஃபார் இன்னோவேஷனை’ சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய 45 ரோபோக்கள் இந்த சாதனையை படைத்துள்ளன.
ப்ளூ டூத் மூலம் ஆண்டிராய்ட் தளத்தில் இயங்கும் செயலியால் கட்டுப்படுத்தபட்ட இந்த ரோபோக்கள், 15 நிமிடங்கள் எந்த மனித இடையூறும் இல்லாமல் இயங்கி சாதனை நிகழ்த்தியுள்ளன.
`தூய்மை இந்தியா ரோபோக்கள்`
சமூக நோக்கத்திலும், தங்களது கல்வி நிறுவனத்திற்கு புதிதாக வரும் மாணவர்களுக்கு மின்னணு மற்றும் ரோபோடிக் தொழில் நுட்பத்தின் அடிப்படைகளை கற்பிக்கும் நோக்கிலும், இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் செண்டர் ஃபார் இன்னோவேஷனைச் சேர்ந்த மாணவர் ராகவ் வைத்தியநாதன்.
இந்த ரோபோடிக் உருவாக்கத்திற்கு இரண்டு மாதம் தேவைப்பட்டதாகவும், 270 மாணவர்கள் 50 குழுக்களாக பிரிந்து இதில் செயல்பட்டதாகவும் தெரிவிக்கிறார் செண்டர் ஃபார் இன்னோவேஷனைச் சேர்ந்த மற்றோரு மாணவர் எஸ்.கிஷோர்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டதுதான் இந்த சுத்தம் செய்யும் ரோபோக்கள் என்ற தெரிவித்துள்ளார் இந்த திட்டத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் பி. ரவிந்திரன்.
இம்மாதிரியான பல புதிய கண்டுபிடிப்புகளை தங்கள் நி்றுவன மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என்றும், இப்போது இருக்கும் இந்த ரோபோடிக் கண்டுபிடிப்பை மேம்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வருவதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்தார் மாணவர் ராகவ் வைத்தியநாதன்.
மேலும், ரோபோ உருவாகும் யோசனைக்கும் அதை சந்தைக்கு கொண்டு வருவதற்கும் உள்ள தூரத்தை நீக்க முயற்சிப்பதே தங்களின் எதிர்கால திட்டம் என்றும் கூறுகிறார் ராகவ் வைத்தியநாதன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :