மீனவர் கலவரத்திற்கு தி.மு.க, டிடிவி தினகரனே காரணம்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திங்கட்கிழமையன்று வடசென்னையில் நடைபெற்ற மீனவர் கலவரத்தை தி.மு.க., காங்கிரஸ், டிடிவி தினகரன் பிரிவினரே தூண்டிவிட்டதாக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆனால், போராடிய மீனவர்களை ஜெயக்குமார் அவமானப்படுத்திவிட்டதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.

"அதிக சக்தி வாய்ந்த சீன எஞ்சினைப் பொருத்தியுள்ள படகுகளை வைத்திருப்பவர்களுக்கும், சாதாரண எஞ்சினைப் பொருத்திய படகுகளை வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான பிரச்னை இது.

இந்த சீன எஞ்சின்களை அகற்றுவதற்கான பணிகள் துவங்கிய நிலையில்தான் இந்தக் கலவரம் தூண்டிவிடப்பட்டது" என செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

சீன எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளில் இருந்து அவற்றை நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டு, நீக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து துவங்கிய நிலையில்தான் தி.மு.க., காங்கிரஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து திங்கட்கிழமை போராட்டத்தைத் தூண்டியதாக ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.

வட சென்னைப் பகுதியில் அரசு கட்டியுள்ள மீன் மார்க்கெட்டில் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை வியாபாரிகளிடம் மாமூல் வசூலிக்கும் ரவுடி கும்பலும் இந்த போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

"ஸ்டாலினுக்கு பதில் சொல்வதால் அவருக்கு என்னை பிடிக்கவில்லை. அவர்கள் திட்டமிட்டு செய்த சதியின் காரணமாக இந்தக் கவலரம் நடந்தது. கலவரம் நடந்த இடத்தில் ஸ்டாலின் படம் போட்ட இரு சக்கர வாகனங்கள் கிடைத்திருக்கின்றன. அமைதியைக் குலைக்கவும் ஆர்.கே. நகர் தேர்தலை மனதில் கொண்டும் இதைச் செய்திருக்கிறார்கள்" என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் ஜெயகுமார்.

பல இடங்களிலிருந்து பணம் கொடுத்து ஆள்கள் வரவழைக்கப்பட்டு இந்தக் கலவரம் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.

இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்து ஜெயக்குமார் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தி.மு.கவின் மீனவர் அணிச் செயலாளரான கே.பி.பி. சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீனவ சமுதாயத்தையும் போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார்களையும் ஜெயக்குமார் அவமானப்படுத்தியுள்ளார்" என்று கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஐஸ் வைக்க அமைச்சர் ஜெயக்குமார் பணம் கொடுத்து அதிமுகவினரை அழைத்து வர வேண்டிய அவசியம் இருக்கலாம்.

ஆனால், உணர்வு ரீதியாக தங்கள் உரிமைகளுக்காக போராடிய மீனவர்களை பார்த்து பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்கள் என்று அபத்தமான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

இப்படி மீனவர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு நெடுஞ்சான்கிடையாக விழுந்து அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென தி.மு.க. கூறியுள்ளது.

படகுகளில் அதிக சக்தி வாய்ந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட எஞ்சின்களை சில மீனவர்கள் தங்கள் படகுகளில் பொருத்தி பயன்படுத்துவதற்கு மீனவர்களில் மற்றொரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இது தொடர்பாக மீனவர் பிரதிநிதிகளுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் சீன எஞ்சின்களைப் பொருத்தியுள்ள படகுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து திங்கட்கிழமை காலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் இல்லத்திற்கு அருகில் உள்ள சூரிய நாராயணா சாலையில் பெரும் எண்ணிக்கையில் மீனவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். அப்போது, சில அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி, அதன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது காவல்துறை.

ஆனால், மீண்டும் மீண்டும் மீனவர்கள் சாலையில் குவிந்ததால் சில படகுகளில் இருந்து சீன எஞ்சின்கள் அகற்றப்பட்டன.

படகுகளில் பொருத்தப்படும் எஞ்சின்கள் பொதுவாக 140-150 குதிரை சக்தி கொண்டவை. ஆனால், சீன எஞ்சின்கள் 650 முதல் 750 குதிரை சக்தி கொண்டவை. வசதியுள்ள மீனவர்களே இந்த எஞ்சிகளைப் பொருத்தி, மீன் வளம் முழுவதையும் சுரண்டிவிடுவதால், தங்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லையென பிற மீனவர்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

சீன எஞ்சின்களை பொருத்திய படகின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர் இன்று இந்த விளக்கத்தைத் தந்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :