சசிகலாவின் பரோல் மனு தள்ளுபடி; மீண்டும் மனு செய்ய வாய்ப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், KASHIF MASOOD
சென்னை மருத்துவமனை ஒன்றில் பல உடல் உறுப்புகள் செயலிழந்ததற்காக அவரது கணவர் ம.நடராஜன் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அவரைப் பார்ப்பதற்காக தம்மை பரோலில்(விடுப்பில்) அனுப்பும்படி சிறை அதிகாரிகளுக்கு சசிகலா மனு செய்திருந்தார்.
அந்த மனுவில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் ஒருவரின் சான்றொப்பம் பெற்ற நடராஜனின் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட குறைபாடுகளைக் காரணம் காட்டி அவரது மனுவரை சிறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தனர்.
"உரிய சான்றிதழோடும், தகவல்களோடும் மீண்டும் மனு செய்யும்படி சசிகலாவின் வழக்குரைஞர்களை சிறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்," என்கிறார் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷி.
ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றிய நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












