You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹரியானா சாமியார் ராம் ரஹீம் வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகள்
"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
ராம் ரஹீம் சிங் வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகள்:
01. ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளில் இதுவரை 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
02. பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும், தீ விபத்து ஒன்றில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ராம் ரஹீம் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த "இசட்" பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று ஹரியானா மாநில தலைமை செயலாளர் அறிவித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
03. சி.பி.ஐ. நீதிமன்றத்தை ரோதக் சிறைக்கு மாற்றி, ராம் ரஹீம் சிங்கின் தண்டனையை அறிவிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சிறப்பு நீதிபதி கைதீப் சிங்கை ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறைக்கு கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
04. ராம் ரஹீம் சிங்கிற்கு பாதுகாப்பு வழங்கிய பஞ்சாப் போஸீடம் இருந்து எகே-47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக போஸீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
05. "தேரா சச்சா செளதா"வின் உண்மையான தலைமையகத்திற்குள் ராணுவம் இன்னும் நுழையவில்லை. அதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.
06. ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், இதுவரை 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மக்கள் நடந்தே பஞ்ச்குலா வந்து குவிந்து விட்டதால் முழுக்கட்டுப்பாட்டை கொண்டுவர முடியவில்லை என்றும் சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
07. மக்கள் கூடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. அதனால்தான் ஹரியானா இத்தகைய சிக்கலில் உள்ளது என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், ஹரியானா முலமைச்சர் கட்டரை விமர்சித்துள்ளார்.
08. ஹரியானா அரசு துணை தலைமை வழக்கறிஞர் குர்தாஸ் சிங் சால்வாரா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராம் ரஹீம் சிங்கின் பையை இவர் தூக்கி வருவதை காணொளி பதிவு காட்டுகிறது.
09. ராஜஸ்தான் மாநிலத்தில் குலாக் நகரில் தீ வைத்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானிலுள்ள ஸ்ரீகான்கா நகரில் ராம் ரஹீம் சிங் பிறந்தார்.
10. நகரில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து பஞ்ச்குலாவின் காவல்துறை துணை ஆணையர் அசோக் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்