ஹரியானா சாமியார் தலைமையகத்தைச் சுற்றி ராணுவம், போலீஸ் குவிப்பு

பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங்கின் தேரா சச்சா சொளதா அமைப்பின் தலைமையகத்தை சுற்றிலும் ராணுவம், போலீஸ், அதிரடிப் படை ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன.

தேரா தலைமையகத்திலும், மாநிலம் முழுவதிலும் அமைந்துள்ள தேராவின் கூடுகை மையங்களிலும் சோதனை நடத்தி, ஆயுதங்கள் இருந்தாால் கைப்பற்றும்படி ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) ராம்நிவாஸ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட உடனே அவரது ஆதரவாளர்கள் ஹரியானா மற்றும் டில்லியின் பல பாகங்களில் வன் செயல்களில் ஈடுபட்டனர்.

ஹரியானா மாநிலத்தின் பல பாகங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வன்முறையிலும், போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் 31 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடைந்தனர்.

சி.பி.ஐ. நீதிமன்றம் அமைந்துள்ள பஞ்ச்குலாவில் வெள்ளிக்கிழமை வன்முறை மையம் கொண்டிருந்தது.

எனினும் அங்கு சனிக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. சிர்சாவில் தேரா சச்சா சௌதாவின் தலைமையகம் அமைந்திருப்பதாலும், அங்கு ஆயிரக்கணக்கில் சாமியாரின் ஆதரவாளர்கள் திரண்டிருந்ததாலும் அங்கு பதற்றம் நீடித்தது.

எனவே, சிர்சாவின் சில பகுதிகளில் சனிக்கிழமையும் ஊரடங்கு நீடித்தது.

ஆகஸ்டு 15-ம் தேதி தமது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு தலைமையகத்துக்கு வருமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராம்ரஹீம் சிங்.

இதையடுத்து பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேரா வளாகத்தில் 20 ஆயிரம் பேர் குழுமினர்.

அவர்களில் பலர் தீர்ப்பு வரும் வரை அங்கேயே தங்கி இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

போலீசார் ஒலி பெருக்கி மூலம் அவர்களை வெளியேறும்படி சனிக்கிழமை கேட்டுக்கொண்டதை அடுத்து பலர் வளாகத்தை விட்டு வெளியேறினர். அவர்களில் பலரிடம் இருந்து தடி, பாட்டில்கள், கத்தி, பெட்ரோல் குண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.

வெளியேறுகிறவர்கள் ஊர்களுக்குத் திரும்ப சிர்சாவில் பேருந்துகள் இல்லை. எனவே, அவர்கள் நடந்தே ராஜஸ்தான் எல்லை நோக்கிச் செல்கின்றனர்.

சனிக்கிழமை பகல் நிலவரப்படி தேரா வளாகத்தில் ராம் ரஹீம் ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

ராணுவத்தினர் வளாகத்துக்கு வெளியே கொடி அணி வகுப்பு நடத்தினர். மாலை வாக்கில், ராணுவத்தினர், போலீசார், அதிரடிப்படையினர் தேரா வளாகத்தில் நுழையக்கூடும் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :