You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய அரசுக் கொறடா கோரிக்கை
தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க வில் டிடிவி தினகரன் அணியில் உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.
அ.தி.மு.கவில் பிளவுபட்டிருந்த எடப்பாடி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் தனி அணியாகச் செயல்பட்டுவருகிறார். 19 சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு மோசமாக இருப்பதால் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக மனு அளித்தனர். ஆளுநர் உகந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரினர்.
இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். சபாநாயகர் தனபாலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன், இந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக தற்போது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்துள்ளதால் தான் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர் பதவியை தாங்களாகவே விட்டுக்கொடுக்கும் நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும், ஆகவே 1986ஆம் ஆண்டின் கட்சி மாறுதல் காரணமாக தகுதியின்மையாக்குதல் விதிப்படி சபாநாயகர் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் ராஜேந்திரன் மனு அளித்திருக்கிறார்.
பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, இது தொடர்பாகவும் சபாநாயரிடம் தான் பரிந்துரை அளித்ததாகவும் அந்தப் பரிந்துரை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டுமெனவும் ராஜேந்திரன் கூறினார்.
ஆனால், தங்கள் பக்கம் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து சேர்ந்தவிடக்கூடாது என்பதற்காகவே கொறடா இப்போது இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதாக டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் தெரிவித்திருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், "இம்மாதிரி கொறடா பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. எடப்பாடி உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்க்கத் துணிந்துவிட்டார். இன்னும் சிலர் எங்களுடன் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று பயந்து இப்படி மிரட்டுகிறார்கள்" என்று கூறினார்.
மேலும், "அரசுக் கொறடா உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தும் என்றாலும் அவர் தற்போது எந்த உத்தரவும் இடவில்லை. இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் இட்ட உத்தரவு தற்போது காலாவதியாகிவிட்டது. ஏற்கனவே அவர் இட்ட உத்தரவை மீறி செயல்பட்ட பன்னீர்செல்வம் தரப்பை அவர் தகுதி நீக்கம் செய்யவில்லை. இப்போது எங்களை நீக்குவேன் என்பதா? முதலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்," என்றார் வெற்றிவேல்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்