தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருப்பதாகக் கூறியிருக்கும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

இது தொடர்பாக தி.மு.கவின் செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "முதல்வர் அவர்களை பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏதாவது ஏற்படும் நிலையில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அரசு தொடரவும், பேரவையின் நம்பிக்கையை பெறுவதில் நிலை நாட்டப்பட்டுள்ள ஜனநாயக மரபுகளை தகர்ப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் அமைந்து விடும்.

மேலும், தற்போது பதவியில் உள்ள முதல்வர், கடந்தமுறை பெரும்பான்மையை நிரூபித்தபோது நடந்தது போலவே, குதிரை பேரம் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் சூழலுக்கு வழியேற்படுத்தி விடும்," என்று குறிப்பிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வலியுறுத்த வேண்டுமெனத் தெரிவித்திருக்கிறார்.

Twitter

பட மூலாதாரம், Twitter

இதே கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையும் வலியுறுத்தியுள்ளன.

"பிப்ரவரி மாதம் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு பதவி விலகிய பிறகு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆளுநர் மீதான நம்பகத்தன்மையை பெருமளவில் குலைத்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை : ஆளுநர் அலுவலகம்

பட மூலாதாரம், NAVY

அது போன்றதொரு, அவப்பெயர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, பேரவையை அடுத்த மூன்று நாட்களில் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும்," என பா.ம.கவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.

இதற்கிடையில், மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான வைத்தியலிங்கத்தைக் கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று காலையில் அறிவித்தார்.

இந்நிலையில், தஞ்சாவூரில் தினகரன் ஆதரவாளர்களுக்கும் வைத்தியலிங்கம் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :