You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமி குழந்தையுடன் நலம்: மருத்துவர்கள்
கருக்கலைப்பு செய்ய இந்திய உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட, பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியும் அவளது குழந்தையும் நலமுடன் இருப்பதாக, அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுமிக்கு கடந்த திங்கள்கிழமை சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டிருந்தாகவும், ஆனால், அவளது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் மருத்துவர் தாசரி ஹரிஷ் தெரிவித்தார்.
தன்னைப் பாலியல் வல்லுறவு செய்ததாக அச்சிறுமி குற்றம்சாட்டிய அவரது உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் வயிற்று வலி எடுத்ததையடுத்து, சிகிச்சைக்காக அச்சிறுமியை அவளது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவள் கருவுற்று இருந்தது தெரியவந்தது.
உடல், வயது, மனோ நிலை போன்ற காரணங்களால் அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், அதற்குள் அந்த சிறுமியின் கரு 32 வாரங்களைக் கடந்து வளர்ந்து விட்டது. இதனால், அவரது கருவைக் கலைத்தால் அது சிறுமிக்கும் சிசுவுக்கும் ஆபத்தாக முடியலாம் என்று நீதிமன்றம் நியமித்த மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்தது.
இதையடுத்து அச்சிறுமியின் கருவை கலைக்கக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சண்டீகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த சிறுமியின் சிசு 2.2 கிலோ எடையுடன் உள்ளது.
அறுவை சிகிச்சை செய்த 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகித்த மருத்துவர் ஹரிஷ், அறுவை சிகிச்சை செய்ய 90 முதல் 105 நிமிடங்கள் வரை ஆனது என்று கூறினார்.
அந்தச் சிறுமியின் குடும்பம், அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காததால், அது தத்தெடுக்கப்படும் வரை, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவால் பராமரிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவின் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் - புள்ளிவிவரங்கள்
•இந்தியாவில்155 நிமிடங்களுக்கு ஒருமுறை 16 வயதுக்கு குறைவான ஒரு குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறது.
•10 வயதுக்கும் குறைவான குழந்தை ஒவ்வொரு 13 மணி நேரத்துக்கு ஒரு முறை வல்லுறவுக்கு ஆளாகிறது.
•இந்தியாவில் இருக்கும் பெண்களில் 24 கோடிப் பேர், 18 வயதுக்கு முன்னரே மணமானவர்கள்.
•அரசு நடத்திய ஒரு ஆய்வில் கலந்துகொண்ட 53.22% குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினார்கள்.
•பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் 50% பேர், குழந்தைகளுக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள்.
ஆதாரம்: இந்திய அரசு, UNICEF
கருகலைப்பு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பதற்கு முன்பாக, சண்டீகரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒன்றும், கருக்கலைப்பு செய்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அதற்கு மறுத்திருந்தது.
பத்து மாதங்களுக்கு முன்னரே பிறந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் உடல்நலம் தற்போது நிலையாக உள்ளதால், குழந்தைகள் பிரிவுக்கு இப்போது அந்த சிசு மாற்றப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்