'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்' என்ற கோரிக்கை விடுப்பவர்கள் காப்பாற்றுவது யாரை?
- எழுதியவர், வீரேந்திர குமார்,
- பதவி, மூத்த பத்திரிகையாளர்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா, ஒரு பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், Facebook/BBC
இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராம்வீர் பட்டி, ''இரவு 12 மணிக்கு மேல் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது'' என்று கருத்து தெரிவித்தார்.
பெண்ணை தொடர்ந்து சென்று தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் விகாஸ் பராலாவையும், மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் ஹரியாணா மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை பின்னிரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 164-இன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்தார்.
பாஜகாவின் கருத்து என்ன?
இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கருத்து விசித்திரமானதாக இருக்கிறது. இந்த விசயத்தில் கட்சியின் கருத்து முரண்பாடுகள் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்டன.

தங்கள் கட்சியின் மாநிலத் தலைவருக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்கிறார்.
'பெண் குழந்தையை காப்பாற்றுங்கள்' என்று முழக்கமிடும் கட்சியின் ஹரியாணா மாநிலப் பிரிவின் தலைவர்கள் யாராவது இந்த விவகாரத்தில் பெண்ணுக்காக குரல் எழுப்பினார்களா? ராஜ்குமார் சைனி மட்டுமே இந்த சம்பவம் குறித்து பேசியிருக்கிறார்.
தவறை கண்டிப்பதற்கு பதிலாக, 'இரவு நேரத்தில் வெளியிடத்தில் பெண்ணுக்கு என்ன வேலை?' என்பது போன்ற முட்டாள்த்தனமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பிரசாரம் நடைபெறுகிறது.
அவர்களது நடத்தையை கேள்விக்குறியாக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எங்கிருந்தோ எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி, பராலாவுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் அந்தப் பெண் என்றும் கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாய்னா என்.சி வெளியிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/SUBHASH BARALA
மகள்களை காப்பாற்றச் சொல்லும் கட்சி, உண்மையில் மகன்களை காப்பாற்றுவதிலேயே அக்கறை காட்டுகிறது. ஒரு பெண்ணுக்கு என்ன நடந்தாலும் அதுபற்றி கவலையில்லை.
ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியின் நிலையில் தாக்கம்
இந்த விவகாரம், மாநில அளவில் கட்சியின் நிலையை ஆட்டம் காணச்செய்துள்ளது. விகாஸ் பராலா இளைஞர், இந்த சம்பவத்தில் அவரது நடவடிக்கைக்கு தந்தை சுபாஷ் பராலாவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறினாலும், இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன?
இரண்டு நாட்களுக்கு பிறகு கண்டனம் தெரிவிக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்.
கைது செய்யப்பட்ட விகாஸ் பராலாவிற்கு உறுதுணையாக இருக்கும் கட்சிக்காரர்கள், பிணை எடுக்க காவல்நிலையத்திற்கு சென்றனர். இவை அனைத்தும் ஹரியாணாவில் கட்சியின் மதிப்பை குறைக்கும்.
இந்த சம்பவம் ஏன் அரசியலாக்கப்படுகிறது?
இது ஒரு சாதாரண சம்பவம். மது போதையில் இருந்த இளைஞர்கள், தங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்று நினைத்திருக்கலாம்.
நடுவீதியில் ஒரு பெண்ணை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தவறாக எதுவும் நிகழாவிட்டாலும் அவர்களின் நோக்கம் என்ன?
சம்பவத்தை கண்டிப்பதற்கு பதிலாக இரவு நேரத்தில் ஒரு பெண் வெளியிடத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி கேட்கும் கட்சியினர், இளைஞர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்வி கேட்பதை ஏன் தவிர்க்கிறார்கள்?
பாரதிய ஜனதா மீது அரசியல் ரீதியான அழுத்தம் ஏற்படுமா?
எதிர்கட்சியினரின் பங்கைவிட ஊடகங்களின் பங்கு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. பழைய நினைவுகளை எழுப்புகிறது. அமைச்சர் வினோத் ஷர்மாவின் மகன், மது பரிமாற மறுத்த பணியாளரை துப்பாக்கியால் சுட்டார்.
மது தீர்ந்து விட்டதாலும், நள்ளிரவைக் கடந்து விட்டதாலும் மது தர மறுத்த மாடல் அழகி ஜெசிகாவை அமைச்சரின் மகன் மனு ஷர்மா சுட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த வழக்கு கடந்த வந்த பாதையில் ஊடகங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல்வாதிகளுக்கு ஆதாயங்களே முக்கியமானது. பராலா தண்டிக்கப்படுவாரா, அரசியல் ரீதியாக இதனால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதைவிட, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே முக்கியம்.
(பிபிசி செய்தியாளர் குஷ்பூவின் உரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்டது)
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












