You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எனக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது': டிடிவி தினகரன்
தனக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தற்போதைய அரசு மீதான விமர்சனத்தை பொதுக்கூட்டங்களின் மூலம் தெரிவிக்கப்போவதாகவும் அ.தி.மு.க. அம்மா பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்" என்று கூறினார்.
மேலும், ஜூன் ஐந்தாம் தேதி சசிகலாவைப் பார்க்க வந்தபோதே தான் எடப்பாடி தரப்புக்கு அறுபது நாள் வாய்ப்பளிக்கப்போவதாக தெரிவித்ததாகவும் அது சரியான யோசனை என்று சசிகலா கூறியதாகவும் தினகரன் கூறினார். இப்போது அறுபது நாட்கள் கடந்துவிட்ட நிலையில், கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாகவும் தினகரன் தெரிவித்தார்.
அவர்களால் கட்சியை ஒன்று சேர்க்க முடியவில்லை என்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் தினகரன் கூறினார்.
3 மாதங்கள் கட்சி அலுவலகத்திற்குச் செல்லாமல் இருந்த தான் விரைவில் கட்சித் தலைமையகத்திற்கு செல்லப்போவதாகவும் செல்லப்போவதாகவும் கூறிய தினகரனிடம், கட்சியும் ஆட்சியும் தங்கள் வசம்தான் இருப்பதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்துக் கேட்டபோது, அவர்களுக்கு இருக்கும் சில பயங்களின் காரணமாக இப்படிப் பேசுவதாகவும் விரைவில் அதிலிருந்து விடுபட்டு, கட்சித் தலைமையை ஏற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடு குறித்துக் கேட்டபோது, தான் விரைவில் மாவட்டம்தோறும் பொதுக்கூட்டங்களில் பேசவிருப்பதாகவும், அதில் தன் கருத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் தினகரன் கூறினார்.
தினகரனுக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிதான் பலமுள்ளதாக இருக்கிறது என்று கேள்வியெழுப்பியபோது, தனக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் சிலர் மட்டுமே வெளிப்படையாக ஆதரவைத் தெரிவித்திருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.
நீங்கள் முதல்வராக விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத நிலையில், தான் முதல்வராக பதவியேற்க விரும்புவது பற்றிய கேள்வியே எழவில்லை என்று தெரிவித்தார்.
தனக்கும் அமைச்சரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டுகிறதா என்பது குறித்து அவர்கள்தான் கூற வேண்டுமென்றும் தினகரன் கூறினர்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்