You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தண்டனையோ வரமோ, எதுவாயிருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் : ஸ்ரேஷ்டா சிங்
- எழுதியவர், சமீராத்மஜ் மிஷ்ரா
- பதவி, பிபிசி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியினருடன் மோதிய மற்றுமொரு காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி மார்ச் 19 ஆம் தேதியன்று ஆட்சிக்கு வந்த பிறகு பணியிட மாறுதல் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பட்டியலில், புதிதாக இடம்பெற்றிருக்கிறார் இளம் காவல்துறை அதிகாரி ஸ்ரேஷ்டா சிங். இவர் புலந்த்ஷகரில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பாரதீய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவருக்கு ஸ்ரேஷ்டா அபராதம் விதித்தார். பின்னர் நீதிமன்றத்திலும் அவரை ஆஜர்படுத்தினார். அபராதம் விதிக்கப்பட்டவரும், அவரது ஆதரவாளர்களும் ஸ்ரேஷ்டாவிடம் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஸ்ரேஷ்டாவுக்கு பாடம் கற்பிக்கப்போவதாக சவாலும் விடுத்தனர்.
பிறகு சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு, ஸ்ரேஷ்டாவுக்கு கிடைத்தது பாடம் மட்டுமல்ல, பணியிட மாறுதலும் தான். அவர் புலந்த்ஷகரில் இருந்து நேபாள எல்லையில் இருக்கும் பெஹ்ரயிச் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது நம்பிக்கைக்கு ஏற்ப நாளும்-கோளும் பார்த்துதான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நல்ல நேரம் பார்த்துதான் சட்டப் பேரவைக்குள் நுழைந்தார். ஆனால் மாநிலத்தின் அதிகாரத்தின் மையமாக இருக்கும் அவர், முந்தைய அரசின் மீது வைத்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் அதாவது, சட்டம்-ஒழுங்கு நிலைமை தற்போதும் அப்படியே தொடர்கிறது.
ஆனால், இது இப்படித்தான் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள், மாநில முதலமைச்சர் பதவிக்கு யோகி ஆதித்யநாத் பெயர் அறிவிக்கப்பட்டபோது, கட்சி அலுவலகம் மற்றம் சட்டமன்றத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் தங்களுடைய 'சக்தி' யை காட்டியபோதே தெரிந்துவிட்டது.
ஆளும் கட்சித் தலைவருக்கு அபராதம் விதித்தால் அபாயமா?
உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மீண்டும் அச்சங்களும், கேள்விகளும் எழுகின்றன. இவை மாநில நிர்வாகத்திற்கும் சிக்கல்களை எழுப்பியிருக்கின்றன. ஆனால் எது எப்படியிருந்தாலும், யார் தவறு செய்தாலும் அதற்கு பலியாவது காவல்துறையே. பாவம் ஒருபுறம் பழி மற்றொருபுறம்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள், சில சமயம் மீரட்டில், சில சமயம் சாஹ்ரன்புரில், காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் மாநில அமைச்சர்கள், ஐ.பி.எஸ் நிலை அதிகாரிகளுடன் மோதுகிறார்கள். சில சமயங்களில் கட்சியின் அடிமட்டத் 'தலைவர்களும்', காவல்துறையினரை, 'பதவியில் இருந்து இறக்கும்' அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர்.
தொடர்படைய தலைப்புகள்
மீரட்டில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சஞ்சய் தியாகி, வாகனத்தில் இருந்து சுழல் விளக்கு அகற்ற முயன்ற காவல்துறை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டார் என்றால், சாஹ்ரன்புரில் உள்ளூர் எம்.பியின் ஆதரவாளர்கள், காவல்துறை அதிகாரியின் அரசு இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலுமே காவல்துறை அதிகாரிகள்தான் பணியிட மாறுதல் செய்யப்படுகிறார்கள்.
ஸ்ரேஷ்டா சிங்குடனான மோதல் அண்மையில் நடைபெற்றது. தனது பயிற்சியை முடித்த ஸ்ரேஷ்டாவின் முதல் நியமனம் புலந்த்ஷகரில்தான். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஒருவருக்கும் ஸ்ரேஷ்டா சிங்கிற்கும் இடையிலான வாக்குவாதத்தின் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன.
அந்த வீடியோப் பதிவில், விதிகளை மீறும் யாரையும் மதிக்க முடியாது என்று ஸ்ரேஷ்டா கூறுகிறார். இப்படி விதிமீறல்களில் ஈடுபட அனுமதி உள்ளது என்றால், அது குறித்து அனுமதி கடிதத்தை முதலமைச்சரிடம் இருந்து வாங்கிவரவேண்டும் என்று கறாராக கூறி, தனது கடமையை செய்கிறார் ஸ்ரேஷ்டா. கடமைக்கு கைமேல் பலன் கிடைத்தது, பணியிட மாறுதலாக எட்டு நாட்களுக்கு பிறகு.
இடமாற்றப் பட்டியலில் இருநூறுக்கும் அதிகமான அதிகாரிகளின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், பணியில் நியமிக்கப்பட்ட எட்டு மாதங்களிலேயே ஒரு அதிகாரி மாற்றப்பட்டதே சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. தனது பணியிட மாறுதலுக்கு இந்த மோதலே காரணமாக இருக்கலாம் என்று ஸ்ரேஷ்டாவே கூறுகிறார்.
பிபிசிக்கு ஸ்ரேஷ்டா அளித்த பேட்டியில், "இது வழக்கமான மாற்றம் என்று கூறினாலும், என்னுடன் பணியில் சேர்ந்த வேறு எந்த அதிகாரிகளும் பணியிட மாறுதல் செய்யப்படவில்லை. நியமிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணியிட மாறுதல் செய்வது வழக்கமில்லை, நான் பணியில் சேர்ந்தே எட்டு மாதங்கள்தான் ஆகிறது" என்று சொல்கிறார்.
மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. தவறு செய்வது ஆளும் கட்சியினராக இருந்தாலும், தண்டனை பெறுவதென்னவோ காவல்துறை அதிகாரிகளே.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லத் தயாராக இல்லை. வேறு யாரையும் குற்றம் சொல்லாத அவர்கள், இது வழக்கமான பணியிட மாறுதல் என்றே கூறுகின்றனர்.
பிற செய்திகள்
சட்டத்தை மீறும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று இப்போதும் கூறுகிறார் மாநில அரசு செய்தி தொடர்பாளரும், அமைச்சருமான ஸ்ரீகாந்த் சர்மா.
எதுஎப்படியிருந்தாலும், இளம் அதிகாரியான ஸ்ரேஷ்டா சிங், இந்த பணியிட மாறுதல் தண்டனையாக இருந்தாலும் சரி, அல்லது வெகுமதியாக இருந்தாலும் சரி அதனை ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.
ஆனால், சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு பணி மாற்றம், துறை மாற்றம், இடமாற்றம் செய்து தண்டிக்கும் போக்கு தொடர்ந்தால், சட்டம், காவல்துறை, அரசு நிர்வாகம் என முக்கியமான மூன்று நிர்வாக அமைப்புமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சென்னையில் 'சிறை அனுபவம்' தரும் உணவகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்