You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் நீண்ட போராட்டத்துக்கு பின் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் ஆயுதப்படையினருக்கு இடையே நடந்துவந்த நீண்ட துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த உறுப்பினர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டின் போது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு கிராமவாசிகள் உயிரிழந்துள்ளனர்.
முன்னர், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த உறுப்பினர் பஷீர் மற்றும் அவரது கூட்டாளிகள், ஸ்ரீநகரின் தெற்கில் 60 மைல் தூரத்தில் உள்ள தியால்கம் என்ற இடத்தில் ஒரு வீட்டிற்குள் சிக்கியிருப்பதாக நம்பப்பட்டது.
தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் தாக்கும் இடத்திற்கு அருகில், உள்ளூர் ஆண்கள், பெண்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான போலீஸார் மற்றும் ராணுவத்தினர் கிராமத்தை சுற்றி வளைத்தனர்.
''தீவிரவாதிகள், பொதுமக்கள் வாழும் வீடுகளில் பதுங்கியிருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிக்கிறோம்'' என ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் செய்தி தொடர்பாளர் மனோஜ் பாண்ட்யா கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டினால், பெண் போராட்டக்காரர் உயிரிழந்ததை அவர் உறுதிப்படுத்தினார்.
ஆயுதப்படையினர், பொதுமக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் மூலம், தீவிரவாதிகள் காவல் வளையத்தில் இருந்து தப்பித்து போக உதவியுள்ளனர் எனக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
துப்பாக்கி குண்டு காயங்களால் பெண் இறந்துபோனதாக, காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் எச்சரிக்கைகள் விடுத்த போதிலும், தீவிரவாதிகள் தப்பிச் செல்ல உதவும் பொருட்டு சண்டை நடக்கும் இடத்திற்கு பொதுமக்கள் கூட்டமாகச் சென்று, பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய மோதல்களில் இரண்டு பெண்கள் உட்பட ஒரு டஜன் கணக்கான பொதுமக்கள் இறந்துள்ளனர்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக்குகை கோயிலில், ஒரு மாத காலம் இந்து யாத்திரை நடைபெற உள்ளது. இதற்காக இமயமலை பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த கோடையின் போது பிரபல தீவிரவாத தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, நடந்த போராட்டங்களில் 95-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
புர்ஹான் வானி நினைவு தினமான ஜூலை 8-ம் தேதிக்கு முன்பாக தான் நடத்த உள்ள ஒரு வாரத்திற்கான `` போராட்ட திட்டத்தை` அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத தலைவர் சலாவுதின் இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிட்டார்.
நினைவு தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதுடன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்