You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது
இந்தியா விடுதலை பெற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவில் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் இந்தியா முழுவதும் நிலவிவந்த பல்வேறு விதமான மாநில அரசின் வரிகள் நீக்கப்பட்டு, ஒரே விதமான வரி விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இதனைத் துவக்கிவைத்தார்.
இந்த ஒற்றை வரிவிதிப்பின் மூலம் வரி வருவாய் உயர்வதோடு, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என இந்திய அரசு கூறுகிறது.
இந்தச் சீர்திருத்தத்தின் மூலம் பொருளாதாரம் 2 சதவீதம் அளவுக்கு வளரும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இந்த வரி மாற்றங்களை அமல்படுத்த தங்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டுமென தொழில்துறையினர் கோரிவருகின்றனர்.
"இவ்வளவு பெரிய பரப்பும், சிக்கலும் கொண்ட எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு பெரிய அளவில் வரிச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில்லை" என எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் ஹரி சங்கர் சுப்பிரமணியன் பிபிசியிடம் கூறினார்.
இந்த புதிய வரிவிதிப்பு முறையின்படி, பொருள்களும் சேவைகளும் 5, 12, 18, 28 ஆகிய நான்கு விதமான வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
காய்கறிகள், பால் போன்றவற்றிற்கு இந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறையின் காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலையும் சேவைகளின் கட்டணமும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில், பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமடையும் எனவும் வரி விதிப்பு முழுமையாக செயல்படுத்தப்பட ஆரம்பித்ததும் அவை சீரடையும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
வரி பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டும்
வெள்ளிக்கிழமையன்று இரவில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோதி, இது மிக வெளிப்படையான வரிவிதிப்பு முறையென்றும் இதன் மூலம் நாட்டில் உள்ள 500 வகையான வரிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக தொழில்துறை சந்தித்துவந்த ஆய்வாளர் ராஜ்ஜியத்திற்கும் வரி பயங்கரவாதத்திற்கும் இது முடிவுகட்டும் என்றும் கூறினார்.
காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வைப் புறக்கணித்தன. விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடா, பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருடன் மேடையில் அமர்ந்திருந்தார்.
இந்த நிகழ்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் உரங்களுக்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தது. டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரியும் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
பிற செய்திகள் :
- வீனஸ் வில்லியம்ஸ் கார் மோதி முதியவர் மரணம்: ஆனாலும் வழக்கு இல்லை
- பாரிஸில் மசூதிக்கு வெளியே வாகனம் ஓட்டி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒருவர் கைது
- ஜார்க்கண்ட்: தடை செய்யப்பட்ட இறைச்சியை எடுத்து சென்றதற்காக அடித்துக் கொல்லப்பட்டாரா அலிமுதீன் ?
- தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்
- டிரம்பின் பயணத் தடை: யார் உள்ளே? யார் வெளியே?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்