You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்க்கண்ட்: தடை செய்யப்பட்ட இறைச்சியை எடுத்து சென்றதற்காக அடித்துக் கொல்லப்பட்டாரா அலிமுதீன் ?
கடவுள் பக்தி என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொலைகள் குறித்து நேற்றைய தினம் (வியாழக்கிமை) பிரதமர் மோதி தன்னுடைய கண்டனங்களைத் தெரிவித்திருந்த நிலையில், அவருடைய கருத்துக்கள் வெளியாகி சில மணி நேரங்களில் ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் குழு ஒன்றால் அடித்து படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் அடித்துக் கொல்லப்பட்டார். அச்சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சூழலில், குஜராத் மாநிலம் சபர்மதிக்கு நேற்று சென்ற பிரதமர் மோதி, ''பசு வழிபாடு என்ற பெயரில் படுகொலைகள் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, மகாத்மா காந்தி இவற்றை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் '' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் நபர் ஒருவர் அவரது வாகனத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப்பட்டு கூட்டத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும், அவரது வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய ஜார்க்கண்ட் போலீஸ் பேச்சாளரும், ஏ.டி.ஜி.பி.யுமான ஆர்.கே மாலிக், வியாழன்யன்று அலிமுதீன் என்ற நபர் தன்னுடைய வாகனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கர் மாவட்டத்திற்கு பயணித்துக் கொண்டிருந்ததாகவும், ராம்கரின் புறநகர் பகுதியில் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து அடித்ததாகவும் கூறியுள்ளார்.
கும்பலிடமிருந்து அலிமுதீனை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், ஆனால் அவரது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் ஆர்.கே மாலிக் தெரிவித்துள்ளார்.
சுமார் 100 கிலோவுக்கு அதிகமான தடை செய்யப்பட்ட இறைச்சி என்ற போலீஸார் கூறும் இறைச்சியை அவருடைய வாகனத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள மாலிக், படுகொலைக்கு இந்த இறைச்சிதான் காரணமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படுகொலை ஒரு திட்டமிடப்பட்ட செயல் போன்று தோன்றுவதாகவும், கொலைக்கான காரணத்தை விசாரித்து வருவதாகவும் ஏ டி ஜி பி ஆர்.கே மாலிக் தெரிவித்தார்.
இந்த படுகொலை சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகின்றன. இதில் ஈடுபட்ட 13 தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்