You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போக்குவரத்து விதி விழிப்புணர்வுக்கு `கானா` கானம் - இது சென்னையில்
சாலை விதிகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் விழிப்புணர்வு செய்திகளை `கானா`பாடல் மூலம் சமூக வலைத்தளங்களில் சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல `கானா` பாடகர் 'கானா பாலா' , பத்து வயதில் உள்ள குழந்தைகள் கூட சென்னை சாலைகளில் வீலிங் (wheeling) எனப்படும் ஒரு சக்கரத்தில் சைக்கிள் ஓட்டும் நிலை உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அந்த பாடலில் பாடியுள்ளார்.
( சென்னையின் வட பகுதியில் அடித்தட்டு மக்களிடையே உருவான , குறிப்பாக துக்க நிகழ்வுகளில் பாடப்பட்ட பாடல்கள் கானா பாடல்கள் என்று அறியப்பட்டன. இப்போது இந்த வகைப் பாடல்கள் தமிழ்த் திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்துள்ளன.)
கானா பாடல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன் இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நடவடிக்கை என்பதால் அவர்களுக்கு பிடித்தவகையில் இருக்க வேண்டும் என்பதற்காக கானா பாடல் வழியை தேர்ந்தெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
''பல அதிகாரிகள் இது பற்றி யோசித்தபோது, கானா பாடல் என்ற யுக்தி சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டது. இளம் வயதினர் சாலை விதிகளை பின்பற்றவேண்டும் என்பதில் காவல்துறை மட்டுமல்ல பெற்றோர்களும் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது போல, இந்த விழிப்புணர்வு செய்திகளையும் அவர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.
கானா பாலாவிடம் பேசியபோது, பல பெற்றோர்கள் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்றால், தங்களது குழந்தைகளுக்கு புது மாடல் பைக் அல்லது காரை வாங்கித்தருவது ஒரு கலாசாரமாக மாறியுள்ளது என்றார்.
''உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வண்டி ஓட்டுவதை பெற்றோர் கண்டிக்கவேண்டும். பல சாலை விபத்து சம்பவங்கள் நேர்வதை இதன்மூலம் தடுக்கமுடியும்,'' என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பட்டம் விடும் கயிற்றால் ஏற்படும் மரணங்கள் பற்றிய பாடல் ஒன்றை சென்னை காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பாடியுள்ளார்.
சாலை விதிகள் பற்றிய கானா பாடலை யூ டிப், பேஸ்புக் என சமூகவலைத்தளங்களில் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை பகிர்ந்துள்ளது.
அந்த பாடலுக்கு கருத்து தெரிவித்தவர்கள் இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்றும் உண்மை நிலை, அழகான பாடல் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்