You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலைவிரித்தாடும் ஊழலால் திருப்பூர் ஆலைகள் ஒதிஷாவுக்கு இடம்பெயர்கின்றன: ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தொழில் செய்வதற்கு உகந்த சூழல் நிலவவில்லை என்றும், இதனால் தமிழகத்தை சேர்ந்த துணி ஆலைகள் ஒதிஷாவுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொழில் துறையைப் பொறுத்தவரை விருந்தினர்களை வரவேற்று உபசரிக்காத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
''தமிழகத்தில் தொழில் செய்வது கடினமாக மாறி வருவதாகக் குற்றம்சாட்டி திருப்பூரில் உள்ள ஏராளமான துணி ஆலைகள் ஒதிஷா மாநிலத்திற்கு இடம் பெயர முடிவு செய்திருக்கின்றன'' என மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒதிஷா மாநிலம் ராம்தாஸ்ப்பூர் பகுதியில் மிகப்பெரிய தொழில் நகரை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. மொத்தம் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள தொழில் நகரத்தில் துணி ஆலைகளை நிறுவுவதற்கான ஜவுளி பூங்கா அமைக்க 70 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இராம்தாஸ்பூர் ஜவுளிப் பூங்காவில் துணி ஆலைகளை அமைக்க திருப்பூரைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
'தமிழ்நாட்டில் ஜவுளித்துறைக்கென தனியான கொள்கை கூட இல்லை'
மேலும், இதற்காக திருப்பூரில் செய்யப்பட்டுள்ள முதலீட்டின் ஒரு பகுதியை ஒதிஷாவுக்கு கொண்டு செல்ல அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஒதிஷாவில் தொழில் தொடங்கும் தமிழக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்க அம்மாநில அரசு முன்வந்திருப்பதே இதற்கு காரணம் என்று ராமதாஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராம்தாஸ்ப்பூர் ஜவுளிப்பூங்காவில் துணி ஆலைகளை அமைப்பதற்கான கட்டுமானச் செலவுகள் மற்றும் பொது வசதிகளுக்கான செலவுகளில் 60% மானியமாக வழங்கவும், புதிய எந்திரங்களுக்கான கொள்முதல் விலையில் 25% மானியம் வழங்கவும் ஒதிஷா அரசு முன்வந்திருக்கிறது.
ஆனால், தமிழகத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜவுளித்துறைக்கென தனியான கொள்கை கூட இல்லை என்பது தான் கொடுமை. கடந்த 5 ஆண்டுகளில் ஜவுளித்துறையின் முன்னேற்றத்திற்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட ஜவுளிப் பூங்கா திட்டங்களை செயல்படுத்துவதற்குக் கூட மாநில அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ராமதாஸின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த உற்பத்திக்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவது ஜவுளித்துறைதான்.என்று தெரிவித்த ராமதாஸ், திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.35,000 கோடி மதிப்புள்ள ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஜவுளி ஆலைகள் தான் தரமான வேலைவாய்ப்பை வழங்குகின்றன என்று தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து அண்மைக்காலத்தில் தொழில் நிறுவனங்கள் வெளியேறுவது ஒன்றும் புதிதல்ல. சென்னை அருகே ரூ.10,000 கோடியில் மகிழுந்து ஆலை அமைக்க திட்டமிட்டிருந்த கியா மோட்டார்ஸ் நிறுவனமும், நெல்லையில் அறிவுசார் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க முடிவு செய்திருந்த சிண்டெல் நிறுவனமும் தமிழக ஆட்சியாளர்கள் கேட்ட அளவுக்கு கையூட்டு தர முடியாமல் வெளியேறின என்று ராமதாஸ் தனது அறிக்கையில் நினைவுகூர்ந்தார்.
'தமிழகத்தில் தங்களின் விரிவாக்கத் திட்டத்தை தொழிற்சாலைகள் கைவிட்டன'
இவை மட்டுமின்றி, ஏற்கனவே தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைத்துள்ள அசோக் லேலண்ட், ஃபோர்டு, எம்.ஆர்.எஃப் டயர்ஸ், செயின்ட் கோபைன் கண்ணாடி நிறுவனம் ஆகியவை தமிழகத்தில் தங்களின் தொழிற்சாலைகளை விரிவாக்கும் திட்டத்தை கைவிட்டு, வெளிமாநிலங்களில் முதலீடு செய்துள்ளன.
''தமிழகத்தில் தொழில் செய்வது மிகவும் சவாலான ஒன்றாக மாறி வருகிறது. தமிழகத்தில் நிலைமை மேம்பட வேண்டும். எங்கள் குழுமத்தின் சார்பில் தமிழகத்தில் நாங்கள் செய்யும் தொழில் மற்றும் எங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்து விட்டது'' என்று முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் வெள்ளையன் அண்மையில் கூறியிருந்தார்.
தமிழகம் தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்ற தகுதியை வேகமாக இழந்து வருகிறது என்பதற்கு முருகப்பா குழும அதிபர் வெள்ளையனின் வாக்குமூலத்தை விட வேறு சிறந்த உதாரணம் எதுவும் தேவையில்லை என்று மேலும் ராமதாஸ் தெரிவித்தார்.
'எங்கும் ஊழல், எதிலும் ஊழல்'
எங்கும் ஊழல், எதிலும் ஊழல், காண்பதில் எல்லாம் ஊழல், தொட்டதில் எல்லாம் ஊழல் என தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவது தான் இந்த அவல நிலைக்கு காரணம் ஆகும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இனியும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கூட்டம் அரக்கத்தனமாக ஊழல் செய்து குவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களால் தமிழகம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான பினாமி ஊழல்வாதிகளுக்கு மறக்க முடியாத தண்டனை வழங்கும் நாளுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி என்று ராமதாஸின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்