You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு
கத்தார் மீது தடைகளை விதித்த வளைகுடா பகுதி நாடுகள், தங்களின் நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வெளியிட்ட கருத்துகளை வரவேற்றுள்ளன.
ஆனால் அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறித்து அந்நாடுகள் மௌனம் சாதித்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப் இவ்விஷயத்தில் காட்டிய ''தலைமைத்துவத்தை'' பாராட்டியிருக்கிறது.
ஆனால், இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய மனிதாபிமான விளைவுகள் பற்றி அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் வெளியிட்ட எச்சரிக்கை குறித்து அந்நாடுகள் பதிலளிக்கவில்லை.
கத்தார் ''மற்றவர்களைக் கொல்ல மக்களுக்கு பயிற்சி தருவதை நிறுத்த வேண்டும்'' என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
கத்தார் ''மற்ற ஒற்றுமையான நாடுகளின் மத்தியில்'' மீண்டும் வரவேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்த இரு அமெரிக்க தலைவர்களும் ஒரே கருத்தைத்தான், ஆனால் வெவ்வேறு அம்சங்களில் அழுத்தங்களைத்தந்து வெளிப்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கினர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க, சின்னஞ்சிறிய நாடான, கத்தார், தான் இஸ்லாமியவாத தீவிரவாதிகளை ஆதரிப்பதாகக் கூறப்படுவதை பலமாக மறுக்கிறது.
கத்தாரின் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி கத்தாருக்கு ஆதரவு திரட்ட ஐரோப்பா சென்றிருக்கிறார்.
தனது நாடு '' வெற்றிகரமானதாகவும், முற்போக்கானதாகவும்'' இருப்பதால் அது தனிமைப்படுத்தப்படுவதாகவும், தனது நாடு '' ஒரு அமைதிக்கான அரங்கம், பயங்கரவாதத்துக்கானது அல்ல '' என்று கத்தாரின் ஷேக் மொஹமது கூறுகிறார்.
அவரை சனிக்கிழமை மாஸ்கோவில் சந்தித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சார்கெய் லாவ்ரோவ், அரபு உலகத்தில் நிலைமை கடுமையாக மோசமடைவதைப் பற்றி தான் கவலைப்படுவதாகவும், ரஷ்யா இந்த நிலைமையை தணிக்க தன்னாலானதைச் செய்யும் என்றும் கூறினார்.
வெள்ளியன்று, துருக்கிய அதிபர் ரெசெப் தய்யீப் எர்துவான், இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கத்தார் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதாக தான் அறிந்திருக்கவேயில்லை என்றும், அதன் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.
தொடர்பான செய்திகள்:
இதுவும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்