You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி குறித்து `நமது எம்.ஜி.ஆர்` விமர்சனத்திற்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லை : நிதியமைச்சர் ஜெயகுமார்
ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேட்டில் வெளிவந்த பிரதமர் நரேந்திர மோதி குறித்த விமர்சனத்திற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லையென மாநில நிதியமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார்.
தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடாக நமது எம்.ஜி.ஆர் என்ற நாளிதழ் வெளிவருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரு பிரிவாக பிரிந்த பிறகு, சசிகலா தரப்பு அந்த நாளிதழைக் கட்டுப்படுத்திவருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமையன்று அந்த நாளிதழில் பிரதமர் மோதியின் மூன்றாண்டு ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து கவிதை வடிவில் ஒரு விமர்சனக் குறிப்பு வெளியாகியிருந்தது.
சித்திரகுப்தன் என்ற பெயரில் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ் அதனை எழுதியிருந்தார்.
அந்த விமர்சனக் குறிப்பில், "இது நாடு காக்கும் அரசா, மாடு காக்கும் அரசா?, சகலரும் வாழ்த்தும் அரசா, சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா? பகவத் கீதைக்கு பல்லக்குத் தூக்கும் அரசா, பாரதத்தின் பன்முகத் தன்மையை போக்கும் அரசா?" என்று கேள்வியெழுப்பியதோடு, "மூச்சு முட்டப் பேசியே மூன்றாண்டு போச்சு, ஆனாலும் எந்திர தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு" என்றும் கூறப்பட்டிருந்தது.
தற்போதைய ஆளும் கட்சி, மத்திய அரசுடனும் பாரதீய ஜனதாக் கட்சியுடனும் இணக்கமாகப் போக விரும்பும் நிலையில், நமது எம்.ஜி.ஆரில் மத்திய அரசு குறித்து இந்த விமர்சனம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்று மாநில நிதியமைச்சர் ஜெயகுமாரிடம் நமது எம்.ஜி.ஆரின் கருத்து குறித்து கேட்டபோது, "அந்த இதழுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. அது அந்தப் பத்திரிகையின் கருத்து" என்று தெரிவித்தார்.
ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அமைச்சர், தனது கட்சிப் பத்திரிகையின் கருத்திலிருந்து ஒதுங்கி பதில் கூறியது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜிடம் கேட்டபோது, "ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவிரும்பலாம். ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான 100 நாள் அரசை பா.ஜ.க. கடுமையாக விமர்சிக்கிறது; கேலி செய்கிறது. அம்மாதிரியான நிலையில், நாங்களும் அதேபோல விமர்சிப்போம் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அரசை விமர்சிக்க துணிச்சல் இல்லாத பா.ஜ.கவினர் இப்போது விமர்சிப்பது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சார்யா, எடப்பாடி பழனிச்சாமி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகளில் கையெழுத்திட்டதைப் பற்றிக் கூறும்போது, சத்துணவு ஆயா வேலைக்கு ஆட்களை நியமிப்பதெல்லாம் சாதனையா என்று கேலி செய்கிறார். இதை நாங்கள் எதற்குப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும்? என்கிறார் மருது அழகுராஜ்.
டிடிவி தினகரன் தரப்பு நமது எம்.ஜி.ஆரைக் கட்டுப்படுத்துவதால்தான் பாரதீய ஜனதாக் கட்சியைத் தாக்குகிறீர்களா என்று கேட்டபோது அதனை அவர் கடுமையாக மறுத்தார்.
இருந்தபோதும், ஒரு கட்டுரை எழுதுவதால் இரு கட்சிகளுக்கு இடையிலான உறவு முறிந்துவிடாது என்றும் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகளை விமர்சிக்கும்போது பாரதீய ஜனதாக் கட்சியை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும் என்கிறார் அவர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்