You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காற்றில் கலந்த கவிக்கோ ; அப்துல் ரஹ்மான் காலமானார்
கவிஞரும் தமிழ் பேராசிரியருமான அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 80.
இருதய நோய், சிறுநீரக நோய்களால் அவதிப்பட்டுவந்த அவர் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில், மூச்சுத் திணறலால் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
மதுரை நகரில் உள்ள சந்தைப்பேட்டையில் சையது அகமது - ஜைனத் பேகம் தம்பதிக்கு 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்த அப்துல் ரஹ்மான், பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் அந்நகரிலேயே முடித்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற இவர், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
தியாகராசர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கவிதைகளை எழுத ஆரம்பித்த அப்துல் ரஹ்மான், பிறகு தமிழில் உருவெடுத்த வானம்பாடி கவிதைப் போக்கின் முக்கியக் கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
"கவிதை குறித்து மிக ஆழமான ஞானம் உடையவர். தமிழ் கவிஞர்களிலேயே மானுடவியல் அறிவு மிக்கவர் இவர்தான் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன், நாட்டுப்புற கலை, இசை வடிவங்களில் பெரும் ஆர்வமும் அறிவும் கொண்டிருந்தார்" என பிபிசிதமிழ்.காம்-இடம் நினைவுகூர்ந்தார் அப்துல் ரஹ்மானுடன் நீண்ட காலம் பழகிய கவிஞர் அறிவுமதி.
"தன்னுடைய சொற்பொழிவுகளாலும் மிகச் சிறப்பான பங்களிப்பை தமிழுக்குச் செய்திருக்கிறார் அப்துல் ரஹ்மான். மதங்களைக் கடத்து தமிழனாகவே இருந்த இவரது மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு" என்கிறார் அறிவுமதி.
அப்துல் ரஹ்மான் அந்த காலகட்டத்தில் எழுதிய `பால்வீதி` என்ற கவிதை மிகுந்த கவனத்தைப் பெற்றது. 1995ல் வெளிவந்த இவரது ஆலாபனை என்ற தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
கவிதைகள் மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். புதுக்கவிதை குறித்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
2009 முதல் 2011 வரை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் அப்துல் ரஹ்மான் செயல்பட்டார்.
இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்