You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியில் தாமதம் ஏன்?
சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் தொடர்ந்து நடந்துவருவதால், இடிக்கும் பணிகளைத் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை பொதுப் பணித்துறையைச் சேர்ந்த பொறியாளர்கள் இன்று ஆய்வு செய்தனர். அதற்குப் பிறகு கட்டடம் மாலையில் இடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
சுற்றிலும் பெரும் எண்ணிக்கையில் கட்டடங்கள் இருப்பதால், வெடிபொருட்களைப் பயன்படுத்தி இடிக்காமல், இயந்திரங்களைக் கொண்டும் ஆட்களை வைத்தும் கட்டடம் இடிக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
பெரிய எடைதூக்கிகளையும் இயந்திரங்களையும் நிறுத்துவதற்கு ஏதுவாக தற்போது சென்னை சில்க்ஸ் கட்டத்தின் கார் நிறுத்துமிடத்தை ஒட்டியுள்ள பகுதியில் வேறு இடங்களில் இருந்து கட்டட இடிபாடுகளைக் கொண்டுவந்து கொட்டும் பணி நடைபெற்றுவருகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் நீர் சேமிப்புத் தொட்டிகள் அந்த இடத்தில் அமைந்திருந்தன. அவற்றை முழுவதுமாக மண்ணால் நிரப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கென 120க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் கொண்டுவரப்பட்டு, கொட்டப்பட்டுவருகிறது.
இந்தப் பணி முடிவடைந்த பிறகு, இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டு கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கும்.
இதன் காரணமாக கட்டடத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அனைத்து வீடுகள், கடைகளில் இருந்து ஆட்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அருகில் உள்ள கடைகள், வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தற்காலிகமாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, இன்று காலையில்தான் முழுமையாக அணைக்கப்பட்டது.
இதற்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
இரண்டாவது நாளாக அந்தக் கட்டத்தின் இருபுறமும் எதிர் பக்கத்திலும் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்