You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது
சென்னை தியாகராய நகரில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் தி சென்னை சில்க்ஸ் என்ற கடையில் புதன்கிழமையன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
45க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் வாகனங்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீ அணைப்பதில் சிரமம் நீடித்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து உள்ளேயே விழுந்தது. முகப்பின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
காலை 7 மணியளவில் முகப்பில் உள்ள பேனர் போன்றவை திடீரென பெரிய அளவில் தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தீ தற்போது அணைக்கப்பட்டுவிட்டது. கட்டடத்தின் உள்பகுதியில் சில இடங்களில் தீ எரிந்து வருகிறது.
சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக கட்டடத்தில் தீ எரிந்ததால், கட்டடம் மிக அபாயகரமான நிலையில் இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. உஸ்மான் சாலை வாகனப்போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் கட்டடத்தை வேடிக்கை பார்க்க வரவேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. கட்டத்தைச் சுற்றிலும் நூறு மீட்டர் தூரத்திற்கு யாரும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்