You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
``இந்தியக் காஷ்மீருக்கு வந்து போவது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை``
பாகிஸ்தானின் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரைச் சேர்ந்தவரை மணந்து கொண்ட இந்திய பிரஜை, தான் அங்கு வசிப்பது பற்றியும் தனது தாய்,தந்தை மற்றும் உறவினர்களை காண இந்தியாவிற்கு வருவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் பிபிசியிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
அவருடைய தந்தை பாகிஸ்தானில் இருந்து வரும்போது எனக்கு 20 வயது. எல்.ஓ.சியில் (கட்டுப்பாட்டுக் கோட்டில்) என் அப்பாவை சந்தித்தார், வீட்டிற்கு வந்தார், மகனுக்காக என்னை பெண் கேட்டார்.
என் மாமனார் உறவில் எனக்கு தாத்தா முறை. இப்படித்தான் எனக்கு திருமணம் நடந்தது. இதற்கு முன் எங்கள் குடும்பத்தில் யாரும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் காஷ்மீரை சேர்ந்தவர்களை திருமணம் செய்ததில்லை.
நான் அங்கு போனதே இல்லை. ஆனால் என் அப்பா போயிருக்கிறார். அங்கு நிறைய உறவினர்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறார். என் அப்பாவின் முடிவை எதிர்த்துப் பேச எனக்கு எந்தவித உரிமையும் இல்லை, எப்போதுமே உரிமை இருந்ததில்லை.
எல்லாமே திடீரென்று முடிந்துவிட்டது. வருங்கால கணவரை நான் பார்த்ததுமில்லை, பேசியதுமில்லை, பிரச்சனைகளைப் பற்றியும் தெரியாது.
திருமணம் நடந்தபோது எனக்கு ஒன்றுமே தெரியாது, இந்தியாவில் இருக்கும் காஷ்மீருக்கு வந்து போவது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
நான் இந்திய பிரஜை. விசா பெற்று முஜாஃபராபாதில் வசிக்கிறேன். இங்கு அனைத்துமே வித்தியாசமாக இருக்கிறது. இஸ்லாமிய நடைமுறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது எனக்கு பிடித்திருக்கிறது.
இந்தியாவில் குப்வாராவைச் சேர்ந்தவள் நான். அங்கு பெண்கள் எப்போதும் புர்கா அணிந்திருக்கமாட்டோம். இங்கு புர்கா அணிவது மிகவும் அவசியம்.
மொழி, உணவு, பழக்க-வழக்கங்கள் என அனைத்தும் மாறுபட்டிருக்கிறது. ஆனால் இப்போது பழகிவிட்டது. எனக்கு எல்லாமே பிடித்திருக்கிறது.
தொடக்கத்தில் பெற்றவர்களை பிரிந்து இருப்பதற்கு பயமாக இருந்தது, குடும்பத்தினரின் நினைவாகவே இருப்பேன்.
குப்வாராவில் எங்கள் உறவினர்கள் மிகவும் நிறைய பேர் இருக்கிறார்கள், அனைவருமே அக்கம்-பக்கத்திலேயே வசிக்கிறார்கள், அந்த பகுதியில் இருக்கும் எல்லாருமே எங்கள் சொந்தக்காரர்கள் என்றே சொல்லலாம்.
அங்கு எனக்கு பல தோழிகள் இருக்கிறார்கள். ஆனால், இங்கு பெண்கள் வீட்டிற்குள்ளே இருக்கவேண்டும் என்பது தான் மரபு. பெண்களின் வாழ்க்கை என்பது வீட்டிற்குள் தான்.
திருமணத்திற்கு முன்பு நான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டு, மதரசாவில் படிக்கத்தொடங்கினேன்.
மகாராஷ்டிராவில் மாலேகாவில் ஐந்து ஆண்டுகள் படித்தேன், பிறகு மதரசாவில் படிக்கத் தொடங்கினேன்.
இங்கு வந்த பிறகு எல்லாமே விட்டுப் போய்விட்டது. இனிமேல் படித்தாலும் படிப்பேன்.
விசா பிரச்சினை
திருமணமாகி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பமாக இருந்தபோது, நான் இந்தியாவிற்கு திரும்பி போக வேண்டியிருந்தது.
எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது, அவள் இந்திய பிரஜை. இரண்டாவது குழந்தை முஜாஃபராபாதில் பிறந்தாள், அவள் பாகிஸ்தான் பிரஜை.
நான் திருமணமாகி இங்கே வந்து வாழவேண்டும் என்பது என் விதி என்பதுபோல, இது அவர்களின் விதி.
இங்கே எல்லாரும் உறவினர்களாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது, வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு பயமேயில்லை.
ராணுவ சோதனைச்சாவடி, வேலைநிறுத்தங்கள், ஊரடங்குச் சட்டம், பள்ளிகள் மூடப்படுவது, இதெல்லாம் குப்வாராவில் இயல்பானதாக இருந்தது. இங்கு அப்படி எதுவும் இல்லை.
ஆனால் பெற்றோரை சந்திப்பதற்காக போய்வருவதற்கான விசா கிடைப்பதில் தான் சிக்கல் அதிகமாகயிருக்கிறது.
பிரிந்தவர்கள் சந்திக்கலாம்.
போக்குவரத்து எளிதாகிவிட்டால், பிரிந்தவர்கள் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அடிக்கடி எழுகிறது.
பெற்றோர்களும் இங்கே வந்து தங்கிவிட்டால் நன்றாக இருக்கும், நல்லது-கெட்டதை அவர்களுடன் அனுபவிக்கலாம் என்று சில சமயங்களில் தோன்றும்.
வீட்டில் நான் தான் மூத்தவள், எனக்குத் தான் முதலில் திருமணம் ஆனது, என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். அங்கிருப்பவர்களையே திருமணம் செய்துக்கொள்ளுங்கள், நம்முடையவர்களுக்கு அருகில் இருப்பது தான் நல்லது என்றுதான் அவர்களிடம் நான் சொல்வேன்.
(பிபிசி செய்தியாளர்கள் திவ்யா ஆர்யா, உஸ்மான் ஜாஹிதுடனான உரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்டது)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்