You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்வாதி கொலைச்சம்பவம் படமாகிறது
தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம் திரைப்படமாக உருவாகிறது.
இப்படத்தை தயாரிப்பது பணம் ஈட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லை, இனியும் நாட்டில் ஸ்வாதி அல்லது ராம்குமார் போன்ற இன்னொருவர் உருவாகிவிடக்கூடாது என்கிற சமூக அக்கறையில்தான் என்கிறார், 'ஸ்வாதி கொலை வழக்கு' படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன்.
மேலும் இப்படத்தில் கற்பனையை சிறிதும் சேர்க்காமல், முழுமையான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு காட்சியும் உருவாக்கப்படுவதாகவும் பிபிசியிடம் பேசிய ரமேஷ் தெரிவித்தார்.
தான் இதுவரை இயக்கியுள்ள அனைத்து திரைப்படங்களிலும் சமூக அக்கறையை பிரதானப்படுத்தியே அவற்றை உருவாக்கியுள்ளதாக ரமேஷ் கூறினார்.
அடிப்படையிலேயே சமூக அக்கறை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள தன்னால், இது போன்ற சம்பவங்களை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை என்பதன் விளைவாகவே, சுவாதி கொலை சம்பவம் நடைபெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே இப்படத்தை தான் இயக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
சுவாதி கொலை சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரம் வரை, அநாதை பிணம் போல அப்பெண்னின் உடல் கிடந்த சம்பவம், பத்து மாதம் வரை, அந்த கொலை சம்பவம் நடைபெற்ற நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படாமல் இருந்த தகவல் போன்றவை தன் மனதை அதிகம் பாதித்த விஷயங்களாக கூறுகிறார் இயக்குநர் ரமேஷ்.
நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கதையை உள்ளடக்கிய திரைப்படங்கள், தமிழ்த்திரையுலகில் அதிக அளவில் வெளிவந்துள்ள போதும், சம்பவம் நடைபெற்ற ஒரு வருடத்திற்கு உள்ளாகவே திரைப்படமாக உருவாக்கப்படும் முதல் படம் 'சுவாதி கொலை வழக்கு'.
அதேபோல விசாரணை, வனயுத்தம், விண்மீன்கள், கழுகு, அரவான், நடுநிசி நாய்கள், குப்பி, கல்லூரி போன்ற நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களின் பெயர்கள் கூட நேரடியாக நிஜ சம்பவத்தை குறிப்பிடும்படியாக அமைக்கப்படவில்லை.
அதிலிருந்து மாறுபட்டு, முதல் முறையாக 'சுவாதி கொலை வழக்கு' என நிஜ சம்பவத்தை நேரடியாக குறிப்பிடும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாலும் இப்படம் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தை உருவாக்குவதற்கு முன்பாகவே சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்தை சேர்ந்த யாரிடமும் அனுமதி பெறவில்லை என்றும், ஆனால் திரைப்பட பணிகள் முழுமையாக முடிவுற்றவுடன், அந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அப்படத்தை திரையிட்டு காட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் இயக்குநர் ரமேஷ்.
அதுமட்டுமில்லாமல், இப்படம் வெளியானால் கூட சுவாதி, ராம்குமார் என இந்த இருவர் மட்டுமில்லாமல், இவர்கள் சார்ந்த கும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர் என எவருடைய தனியுரிமையும் பாதிப்படையாது என்றும் ரமேஷ் உறுதியளித்தார்.
சுவாதி வேடத்தில் ஆயிரா என்பவரும், ராம்குமாராக மனோ என்கிற அறிமுக நடிகரும் நடிக்கின்றார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்