நக்சல் இயக்கம் ; 'அரசியல் ரீதியில் தோற்றாலும், அழியாமலிருக்க அரசே காரணம் '

    • எழுதியவர், அ மார்க்ஸ்
    • பதவி, எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர்

(இந்தியாவில் நக்சல்பாரி புரட்சி இயக்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்த அமைப்பு தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பல்வேறு தளங்களில் உள்ள சிந்தனையாளர்கள் பிபிசிதமிழ்.காம் பக்கங்களில் தங்கள் கருத்துகளை எழுதுகின்றனர். அந்தக் கட்டுரைத் தொடரில் மூன்றாவதாக, இடதுசாரி எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் .மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இன்று வெளியாகிறது. இத்தொடரில் வெளியாகும் கருத்துக்கள் கட்டுரையாளர்களுடைய சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மே.வங்கத்தில் உள்ள நக்சல்பாரி எனும் கிராமத்தில் விவசாயிகள் இணைந்து ஒரு பண்ணையிலிருந்த தானியங்களை அறுவடை செய்து அங்கு செங்கொடியை நாட்டியதோடு தொடங்கியது 'வசந்தத்தின் இடிமுழக்கம்' எனக் கொண்டாடப்பட்ட நக்சல்பாரி இயக்கம்.

நாடாளுமன்றப் பாதைக்குள் முழுமையாக அமிழ்ந்து பிற முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து எந்த வகையிலும் வேறுபடாது மாறியிருந்த இடது, வலது இந்தியக் கம்யூ கட்சிகளில் வெறுப்புற்றிருந்த எண்ணற்ற இளைஞர்கள் அதன்பால் ஈர்க்கப் பட்டனர்.

அந்த இயக்கத்தின் அழைப்பை ஏற்று 1969 மே தினத்தில் கல்கத்தாவில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டதைக் கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சி நடுங்கியது. 1969 ஏப்ரல் 22 அன்று "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்)" பிரகடனம் செய்யப்பட்டது.

இது தொடர்புடைய கட்டுரை

'நக்சல்பாரி இயக்கம்' எனப் பொதுவாக அறியப்பட்டிருந்த அந்த இயக்கம் மைய நீரோட்டப் பொதுவுடைமைக் கட்சிகள் இரண்டிலிருந்தும் மூன்று அம்சங்களில் வேறுபட்டிருந்தது.

1.இது ஒரு அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனியச் சமூகம். எனவே இது ஒரு சுதந்திர நாடல்ல. இங்கிருப்பது ஜனநாயகமும் இல்லை.

2.எனவே பாராளுமன்றப் பாதையை ஏற்க இயலாது. ஆயுதம் தாங்கிய புரட்சிப் பாதை ஒன்றே வழி.

3. சோவியத் யூனியன் ஒரு சோஷலிசச் சமுதாயமல்ல. அது ஒரு சமூக ஏகாதிபத்தியம்.

இந்த அடிப்படையில் புரட்சியின் எதிரிகள் என ஏகாதிபத்தியம், சமூக ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு அதிகார வர்க்க முதலாளியம் ஆகியன முன்வைக்கப்பட்டன. இது 'மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டம்' என அடையாளப்படுத்தப்பட்டது.

"அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கிறது"

"முன்னோக்கி நடைபோடு, இழப்புகளுக்கு அஞ்சாதே,வெற்றி அருகில்"

-என மக்களை ஊக்கியது மா-லெ இயக்கம்.

கிராமங்களை விடுதலை செய்து பின் நகரங்களைச் சுற்றி வளைத்தல், வர்க்க எதிரிகளை அழித்தொழித்து விடுதலைப் பிரதேசங்களை உருவாக்குதல், நீண்ட கால மக்கள் யுத்தம் முதலியன அதன் அரசியல் திட்டங்களாக முன்வைக்கப்பட்டன.

பொய்த்த மதிப்பீடுகள், தகர்ந்த நம்பிக்கைகள்

"இந்தியாவின் ஒவ்வொரு அங்குலமும் தீப்பற்றத் தயாராக உள்ளது" எனச் சொன்ன நக்சல்பாரி இயக்கத்தின் 'லெஜன்ட்' சாரு மஜூம்தார் 1971ல் ஆயுதப் போராட்டம் உறுதி பெற்று 1975ல் புரட்சி வெற்றி பெறும் என்றார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் வீழ்ச்சியோடு எல்லாத் துன்பங்களும் ஒழிந்தன என நம்பி தேச உருவாக்கத்தில் இணைந்து நின்ற ஒரு தலைமுறை இந்த 20 ஆண்டுகளில் தாங்கள் நம்பிய எதுவும் நடக்காததைக் கண்டு மனம் கலங்கியிருந்த தருணம் அது.

நக்சல்பாரி எழுச்சியில் பெரிய அளவில் ஆங்காங்கு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர்.

'"நிலப்பிரபுக்களின் இரத்தத்தில் கை நனைப்பது" என்கிற வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கென தங்கள் கல்வியையும் எதிர்காலத்தையும் துறந்து எத்தனையோ இளைஞர்கள் களம் புகுந்தனர்.

தமிழகம், கேரளம் என எல்லாப் பகுதிகளிலும் அது எதிரொலித்தது. மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்றுக் களம் புகுந்த எண்ணற்ற இளைஞர்கள் போல இப்போதும் நடந்தது.

அப்பு. பாலன், கோதண்டராமன், தமிழரசன்,தியாகு, லெனின் ... என்றொரு தலைமுறை அடுத்தடுத்துத் தங்களை இந்தப் போரில் அர்ப்பணித்துக் கொண்டனர்.

ஆனால் என்ன நடந்தது?

அனைத்து மதிப்பீடுகளும் பொய்த்தன. எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்தன.

1972 க்கு முன்பே நக்சல்பாரி இயக்கம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்தது. 1972 ஜூலை 16 ல் தோழர் சாரு மஜூம்தார் கைது செய்யப்பட்டு அடுத்த 12ம் நாள் "உடல்நலக் குறைவால்" இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 1973ல் நாடெங்கிலும் 32,000 நக்சல் தோழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

1978 தொடங்கி இயக்கம் பல பிளவுகளைச் சந்தித்தது.

புதிதாக உருவான இயக்கங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அழித்தொழிப்புப் பாதையைக் கைவிட்டதாக அறிவித்தன,

ஏன் பின்னடைவு ?

ஒன்றிரண்டைத் தவிர. சில அமைப்புகள் தேர்தல் பாதைக்குத் திரும்புவது எனவும் முடிவெடுத்தன.

ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது என முடிவு செய்த அமைப்புகளும் கூட 'இந்தியா முழுவதும் பற்றி எரியத் தயாராக உள்ளது" என்கிற நிலைபாட்டைக் கைவிட்டு தேர்வு செய்யப்பட்ட சில தளப் பகுதிகளை உருவாக்குவது என்கிற முடிவுக்கு வந்தன.

தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் கைதுகள், என்கவுன்டர் படுகொலைகள் என அரச நடவடிக்கைகள், இப்படியான பிளவுகள், நம்பிக்கை இழப்பு ஆகியவற்றின் ஊடாக நக்சல்பாரி இயக்கப் போராளிகள் பலரை அழித்தொழித்தன.

வால்டர் தேவாரத்தின் தலைமையில் இயங்கிய படை இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொன்று குவித்தது.

பின்னடைவுக்கான காரணங்கள் என்ன?

1.இந்தியா இன்னும் சுதந்திரம் அடையாத ஒரு காலனியாகவே உள்ளது என்பதையும், இங்கு ஜனநாயகம் இல்லை என்பதையும் மக்கள் மத்தியில் அவர்களால் திருப்திகரமாக விளக்க இயலவில்லை.

2. 'நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை' என்பதில் "நீண்ட" என்பது ..... இத்தனை நீண்டதாக இருக்கும் என்பதை மக்கள் ஏற்கவில்லை.

3. 160 மாவட்டங்களில் அவர்களின் இருப்பு உள்ளதெனவும், அவற்றில் சுமார் 76 மாவட்டங்களில் அவர்கள் ஓரளவு வலுவாக இருப்பதாகவும் நான்காண்டுகளுக்கு முன் வந்த ஒரு அரசு அறிக்கை கூறுகிறது. 'சிவப்பு நடைவழி' (red corridor) எனப்படும் இப்பகுதி வடக்கே பிஹாரில் தொடங்கி ஜார்கன்ட் மற்றும் சட்டிஸ்கரின் செறிந்த காட்டுப் பகுதி, பழங்குடியினர் செறிந்துள்ள ஒரிசாவின் ஜொராபுட் மற்றும் மல்கன்கிரி ஊடாகக் கீழிறங்கி தெற்கே ஆந்திர மாநிலத்தின் முனை வரை பரவியுள்ளது. ஜார்கண்டை ஒட்டிய மே.வங்க மாவட்டங்களையும் தொட்டுச் செல்கிறது.

ஆக ஒரு ஓரமாக, இந்தியாவின் கிழக்குப் பகுதியை ஒட்டிய வனப்பகுதிகளில் மட்டுமே அவர்களின் இருப்பு உள்ளபோது அவர்களால் நகரங்களைச் சுற்றி வளைத்து விடுதலை செய்வது என்கிற மாஓவின் வழிமுறை இங்கு சாத்தியமில்லாமலேயே உள்ளது.

மைய மற்றும் மேற்கு இந்தியாவில் அவர்கள் இருப்பு இல்லை.

4. வலுவாக உள்ள பகுதிகளில் அவர்கள் விடுதலை செய்த நிலங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தபோதும் அதைப் பாதுகாக்க இயலவில்லை. மத்திய மாநில அரசுகள் தமது மிகக் கடுமையான அடக்குமுறைகள் ஊடாகவும் 'ஆபரேஷன் பர்கா' போன்ற நக்சலைட் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் (Comprehensive area development programme) போன்ற ஆறுதல் நடவடிக்கைகள் ( ameliorative programme) மூலமும் அம்மக்களைத் தம் பிடிக்குள் விரைவில் கொண்டுவந்து விடுகின்றன.

5.ஆயுதப் போராட்டங்கள் தவிர்த்த பிற போராட்ட வடிவங்களை எடுக்காதது, அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது, தேர்தலை முற்றாகப் புறக்கணித்தது, மக்கள் மத்தியில் popular ஆக இருந்த தலைவர்களின் சிலைகளை தகர்த்தது முதலிய அவர்களின் நடவடிக்கைகள் மக்களிடம் நெருங்குவதற்குப் பதிலாக மக்களிடமிருந்து அவர்களை அந்நியப்பட வைத்தன.

வரலாற்றில் இடம்

இவை மட்டுமல்ல. உலக அளவில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனினும் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய வரலாற்றில் இந்த வசந்தத்தின் இடி முழக்கம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதை யாராலும் மறுக்க இயலாது.

என் வயதொத்தவர்களின் நினைவுகளிலிருந்து பிரிக்க இயலாத வரலாறு இது.

இந்திய அரசின் 'திட்டக் கமிஷன்' (Planning Commission) 2008 ல், 'தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி அடிப்படையிலான மாற்றங்கள் குறித்த ஆய்வுக் குழு" ஒன்றை நியமித்தது. முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தவிர பல்கலைக்கழக மான்யக் குழுத் தலைவராக இருந்த சுக்தியோ தோரத், புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபால் ஆகியோரும் அந்தக் குழுவில் பங்கு பெற்றிருந்தனர். "நக்சலைட் தொல்லை" (Naxalite Menace) குறித்து அந்த அறிக்கை முற்றிலும் வேறுபட்ட ஒரு பார்வையை முன்வைத்தது. "எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட பழங்குடி மக்கள் மத்தியில் தாயை இழந்த குழந்தைகளுக்கோர் மாற்றாந் தாய் (surrogate mother) போல நக்சல்பாரி இயக்கம் விளங்குகிறது" - என அந்த அறிக்கை கூறியது.

இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் தானாகவே நக்சல்பாரி இயக்கத்தின் தேவை அழிந்துபடும் என்பது இதன் மறைபொருள்.

மாறும் அரசுகள், மாறாத அணுகுமுறை

ஆனால் என்ன நடந்தது? என்ன நடக்கிறது?

காங்கிரஸ் ஆட்சியானாலும் பா.ஜ.க ஆட்சியானாலும் இரண்டும் மாஓயிஸ்டுகள் என இன்று அழைக்கப்படும் நக்சலைட்களை ஒரே மாதிரியாகத்தான் அணுகுகின்றன,

இராணுவம் மற்றும் அரை இராணுவப் படைகளைக் குவித்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் முதலிய கொடும் சட்டங்களின் துணையோடு மாஓயிஸ்டுகளை மட்டுமின்றி அவர்களை ஆதரிக்கும் பழங்குடி மக்களையும் கொன்று குவிக்கின்றனர்.

ஆதரவாகப் பேசுகிற நடுநிலையாளர்களான பேலா பாட்டியா, ஜீன் டிரெஸ் முதலான மனித உரிமைப் போராளிகள் ஆகியோரையும் நேரடியாகவும் கூலிப் படைகளைக் கொண்டும் தாக்குகின்றனர்.

எல்லாவற்ரையும் விடக் கொடுமை என்னவெனில் மாஓயிஸ்டுகளை ஒழிப்பதற்கென பா.ஜ.கவும் காங்கிரசும் இணைந்து நின்று 'சல்வா ஜூடும்', 'கோப்ரா' , சிறப்பு காவல் அதிகாரிகள்' என்பது போன்ற பெயர்களில் பழங்குடி மக்களில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆயுதங்களையும் அரசு நிதியிலிருந்து ஊதியத்தையும் வழங்கி போராடும் பழங்குடி மக்களைக் கொல்கின்றனர்.

சென்ற மார்ச் 2011 சட்டிஸ்காரில் உள்ள தாண்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களில் உள்ள மோரபள்ளி, தட்மெல்டா, திம்மபுரம் எனும் மூன்று பழங்குடிக் கிராமங்களில் இருந்த 250 வீடுகளை எரித்து அழித்ததோடு நிவாரணம் வழங்க வந்த மாவட்ட ஆட்சியரையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

அப்போது பெங்களூர் மற்ரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சில ஆய்வு மாணவர்களுடன் நான், பேலாபாடியா மற்றும் சுகுமாரன் உள்ளிட்டோர் இரண்டு டிராக்டர்களில் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காட்டுப் பாதைகளின் ஊடாகச் சென்று அவற்றை வினியோகித்து வந்தோம்.

அப்போது மாஓயிஸ்டுகள் மட்டுமின்றி ஆந்திர காவல்துறையினரும் எங்களை எச்சரித்தனர்.

சல்வா ஜூடுமால் ஏதும் ஆபத்துக்கள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல எனக் கூறினர்.

நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் பலமுறை எச்சரித்தும் அவற்றை ஏற்காமல் இப்படியான சட்டவிரோதக் கூலிப் படைகளை அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

பிரச்சினையின் ஆழத்தை ஆராய்ந்து உரிய தீர்வுகளை முன்வைக்காமல் ஒரு பக்கம் பழங்குடியினரின் வாழ்வாதாரங்களை அழித்துக் கார்பொரேட்களுக்குச் சேவை செய்தல், இன்னொரு பக்கம் சட்டவிரோதக் கூலிப் படைகளையும், அடக்குமுறைகளையும் கொண்டு மக்களை ஒடுக்குதல் என்னும் நிலையை அரசுகள் கையாளும் வரை நக்சல்பாரி இயக்கத்தை அவைகளால் ஒழித்துவிட இயலாது.

அரசியல் பாதையில் தோல்வியுற்றிருந்தபோதிலும் நக்சல்பாரி இயக்கம் இன்றும் முற்றாக அழியாமல் இருப்பதன் பின்னணி இதுவே.

(கட்டுரையாளர் , தேசிய மனித உரிமை அமைப்புகளின் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் , முன்னாள் மா.லெ இயக்க உறுப்பினர்.)

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்