You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு
நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இன்று (செவ்வாய்கிழமை) நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், இந்த நடிகர்களை நீதிமன்றம் முன்பாக ஆஜர்ப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது.
பிற செய்திகள் :
தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
அவ்வாறு உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் தொடுத்திருந்த வழக்கு, நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில்தான் இன்றைய உத்தரவும் வெளிவந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைதாகியிருந்த நடிகை புவனேஸ்வரி அளித்திருந்த தகவலாக கூறி, விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகளின் பட்டியல் ஒன்றை பிரபல தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர்களின் பேச்சு பத்திரிகையாளர்களை மிக கேவலமாக சித்தரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.
இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பரப்பப்பட்டிருந்தது.
அந்த வீடியோக்களை ஆதாரமாக கொண்டே இது தொடர்புடைய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்