You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.டி துறையில் `வேலை இழப்புகள்` - ஆர்ப்பாட்டம்
- எழுதியவர், ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்த ஆண்டு பெரிய அளவில் பணி இழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, அத்துறை ஊழியர்களிடையே சற்று அச்சம் நிலவி வருகிறது.
ஆனால், செய்திகளில் வெளியாவது போல இந்த ஆண்டு ஐ.டி. துறையில் பெருமளவிலான வேலை இழப்புகள் இருக்காது என மத்திய அரசின் தகவல் தொழிநுட்பத்துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் பல ஆயிரக்கணக்கான தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள் என்று செய்திகள் வந்தாலும், இது குறித்து அதிகார பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை என்றே நாஸ்காம் என்ற தொழில் நுட்பத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஐந்து லட்சம் பேருக்கு வேலைகளை வழங்கியுள்ள ஐ.டி. துறை மீது அரசு உரிய கவனம் செலுத்திவருவதாகவும் அருணா சுந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும்,பாதிக்கப்படும் ஊழியர்களின் நலன் மீது எந்தவிதமான அக்கறையும் கொள்வதில்லை என்றும் தீவிர இடது சாரி அமைப்பான, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்தோடு ஐ.டி.துறையில் ஈடுபடும் பெருநிறுவனங்களில் 50 சதவிதத்திற்கும் மேலானவர்கள் சட்ட விரோத ஆட்குறைப்பில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, அவர்களுக்கு எதிராக அந்த அமைப்பின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவினர் சென்னை சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
ஐ.டி. நிறுவனங்களில் தனிப்பட்ட ஊழியர்களை அழைத்து, கட்டாய ராஜினாமா கடித்தை பெறுவதன் மூலம், இந்த சட்ட விரோத ஆட்குறைப்பு நடத்தப்படுவதாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் கற்பக விநாயகம் குற்றஞ்சாட்டுகிறார்.
தற்போதைய காலகட்டத்தில், ஒரே நேரத்தில் பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதால், அவர்களுக்கு உடனடியாக வேறு நிறுவனங்களில் வேலையில் அமர்வதும் கடினமாக உள்ளது என்கிறார் கற்பக விநாயகம்.
சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியரை கூட திடீரென அவருக்கு செயல்திறன் குறைந்து விட்டதாக கூறி ராஜினாமா செய்ய கூறும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது என்று குறை கூறுகிறார், ஐ.டி. நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்திருந்த ஐ.டி. ஊழியரான ராம்.
ஐ.டி. துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையில்லாமல் அச்சப்படுவதாகவும், அந்த அச்சத்தின் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, அந்த துறையின் வளர்ச்சிக்கு எதிராக அமையக்கூடும் என்று கூறுகிறார் நாஸ்காம் அமைப்பின் மூத்த இயக்குனரான புருஷோத்தமன்.
ஐ.டி. துறையில் பணி இழப்பு ஏற்பட்டால் அது தனிப்பட்டவர்களின் பிரச்னை என்பதை விட அது நாட்டின் வளர்ச்சி குறித்தான பிரச்சனையும் என்பதால், அரசும், நாஸ்காமும் இந்த விவகாரத்தில் அதிகமான அக்கறை காட்டும் என்றும் புருஷோத்தமன் குறிப்பிடுகிறார்.
அத்தோடு இந்தியாவில் மற்ற துறைகளை சேர்ந்த பெருநிறுவனங்கள் நஷ்டம் ஏற்பட்ட அதன் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வரலாறு உள்ளது என்றும், ஆனால் ஐ.டி.துறையில் இதுவரை அது போன்ற நிகழ்வு எதுவும் ஏற்பட்டது இல்லை என்பதாலும் அத்துறை சார்ந்த ஊழியர்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என புருஷோத்தமன் தெரிவித்தார்.
மேலும், இதனால் எதாவது ஒரு நிறுவனத்தில் வேலை இல்லை என்கிற நிலை எப்போதாவது தோன்றினாலும் கூட, முழுவதுமாக இந்த துறையில் வேலை வாய்ப்பின்மை என்கிற நிலை உருவாகாது என்கிறார் புருஷோத்தமன்.
பிற முக்கிய செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்