You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது: எடப்பாடி பழனிச்சாமி
டில்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் தான்வலியுறுத்தியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
டெல்லியில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாடினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடுகையில், ''மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மோதியின் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை சமர்ப்பித்தோம்'' என்று கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் தான் அளித்ததாக தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ''விவசாயிகளின் பிரச்சனை குறித்து நான் மாநில முதல்வர்கள் கூட்டத்திலும் வலியுறுத்தி பேசினேன்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ''இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 133 படகுகளை மீட்பது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
நாளை பிரதமரை சந்திக்கும் திட்டம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படியான திட்டம் எதுவும் இல்லை என்றும், இன்றிரவே தான் சென்னை செல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும், ''நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், 'விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்துவேன்' என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும், 41 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் தமிழகத்துக்கு திரும்ப வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்