You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாய கடன் தள்ளுபடி: ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்துக்கு பொருளாதார நிபுணர் எதிர்ப்பு
விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்தால், இந்தியாவில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற ஒழுக்கத்தை அது உடைத்துவிடும் என்றும் அடுத்தமுறை கடனை திருப்பிச் செலுத்த விவசாயிகள் அடுத்த தேர்தல் வரை காத்திருப்பார்கள் என மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
2018ம் நிதியாண்டின் நிதி கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் சர்வதேச ஒப்பீட்டில், அரசின் பற்றாக்குறை என்பது அதிகமாக உள்ளது. இந்த கடன் பணவீக்க பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்தும். விவசாய கடன் தள்ளுபடி இந்த பணவீக்க ஆபத்தை அதிகரிக்ககூடும் என்றார்.
விவசாய கடனை தள்ளுபடி செய்தால் அது பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று ஊர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ள கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் உள்ள பிரச்சனைகளை பேசும் மத்திய ரிசர்வ் வங்கி, விஜய் மல்லையா போன்ற பெருமுதலாளிகளிடம் கடனை வசூலிக்காமல், அவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்வதில் உள்ள முரண்பாடு பற்றி வெளிப்படையாக பேசவேண்டும் என்றார்.
, பெரு முதலாளிகளுக்கு அளிக்கும் கடனை தள்ளுபடி செய்வதால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்காதா என்று கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ''அரசின் மொத்த வருமானத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நிதிதான் விவசாயதுறைக்கு ஒதுக்கீடு செய்கிறது. 1960களுக்கு பிறகு இந்தியாவில் பெரிய அளவில் பாசனவசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. முறையான பாசன வசதி இல்லாமல், விளைவிக்கும் பொருளுக்கு தகுந்த விலைகிடைக்காமல், பதப்படுத்தும் வசதிகள் இல்லாமல் விவசாயிகள் இத்தனை காலமாக விவசாயத்தை தொடர்ந்து செய்துவருதற்காக அவர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.
''அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் விவசாயத் துறைக்கு பெரிய அளவில் மானியம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவைப்பொருத்தவரை விவசாயதுறையில் அரசின் முதலீடு என்பது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. மேலும் குறைந்து வருகிறது. மத்திய, மாநில மாநில அரசுகளின் கவனக்குறைவுதான் விவசாயிகளின் மரணத்திற்கும், அதிகரிக்கும் விவசாய கடன் பிரச்சனைக்கும் காரணம், '' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்