You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"என் மகன் விட்டுச் சென்ற பிரசாரத்தை தொடர்வேன்": ஃபாரூக்கின் தந்தை
- எழுதியவர், முரளீதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, செய்தியாளர்
தன் மகனைப் போலவே, தானும் நாத்திக பிரசாரம் செய்யப் போவதாக, கோயம்புத்தூரில் நாத்திக பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஃபாரூக்கின் தந்தை ஹமீது தெரிவித்திருக்கிறார்.
வெட்டிக்கொல்லப்பட்ட ஃபாரூக்
கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஃபாரூக் (32) கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதியன்று, அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். அன்று இரவு அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து புறப்பட்டுச் சென்ற அவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக, அடுத்த நாள் ஒருவர் சரணடைந்தார். மேலும் சிலர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஃபாரூக் கடுமையான நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாலேயே அவர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.
இந்த நிலையில், பிபிசியிடம் பேசிய ஃபாரூக்கின் தந்தை ஹமீது, திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற கட்சிகளில் இருப்பவர்களைக் கொலை செய்ய வேண்டுமென இஸ்லாத்தில் கூறவில்லை என்றார்.
சமீபத்தில் கோவையில் கொல்லப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் என்பவரது கொலை வழக்குத் தொடர்பாக ஃபாரூக் முன்னதாகக் கைது செய்யப்பட்டிருந்தார். பிறகு, அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
அந்தத் தருணத்தில் ஃபாரூக் செயல்பட்டு வந்த பெரியார் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த வழக்கில் அவருக்காக வாதாடி, ஃபாரூக்கிற்கும் சசிகுமார் கொலைக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்து அவரை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்தனர்.
நபிகள் நாயகம் குறித்து ஃபாரூக் அவதூறாகப் பேசினாரா?
இதற்குப் பிறகே, தங்களது மகன் இந்த அமைப்பில், அதாவது கடவுள் இல்லை என்பதை கொள்கையாகக் கொண்ட அமைப்பில் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்கிறார்கள் ஃபாரூக்கின் தந்தையும், தாயும்.
நபிகள் நாயகம் குறித்து ஃபாரூக் ஒருபோதும் அவதூறாகப் பேசியதில்லை என்றும் இது தொடர்பாக ஒரு புத்தகத்தை வெளியிடவிருந்ததாகக் கூறப்படுவது தவறு என்றும் ஃபாரூக்கின் தந்தை தெரிவித்தார்.
தன் மகன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், அவர் எதற்காகக் கொல்லப்பட்டாரோ அதே கருத்தைத் தானும் பரப்பப் போவதாகவும், மகன் இறந்துவிட்ட துக்கத்திலும், கோபத்திலும் இந்த முடிவுக்கு வரவில்லையென்றும் ஆத்மார்த்தமாகவே இதை உணர்வதாகவும் ஹமீது தெரிவித்தார்.
கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே ஃபாரூக் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயல்பட்டுவந்தாலும், தனக்கு இந்த விஷயம் தெரியவந்ததும் முதலில் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறுகிறார் ஹமீது. தனது உறவினர்கள் ஃபாரூக்கின் அரசியல் செயல்பாடுகள் குறித்து என்ன நினைத்தார்கள் என்பது குறித்து தான் எதையும் பேச விரும்பவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தில் தான் இணைந்து பணியாற்றப்போவதாகவும் எந்த அச்சுறுத்தலுக்கும் தான் பணியப்போவதில்லை என்றும் ஹமீது கூறினார். ஆனால், ஃபாரூக்கின் தாய் ஹமீதின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்