You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளமைக்கும் முதுமைக்கும் இறைவன் செயலி!
ஸ்மார்ட்போனுடன் தொடங்குகிறது 78 வயதான மு.ரகுராமன் மற்றும் அவரது மனைவி சுலோச்சனாவின் (68) காலைப் பொழுதுகள்.
புதுக்கோட்டையை சேர்ந்த இந்த தம்பதி தற்போது தங்களது இரண்டு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். தேவாரம், பஜனை பாடல்கள் என பல ஆன்மீக பாடல்கள் அடங்கிய செயலிகளை (ஆப்) போனில் டவுன்லோட் செய்து கேட்பதுதான் பொழுதுபோக்கு.
காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்கள் சொல்லும் அனுபவப்பாடம்.
செயலிகளின் பயன்பாடு பற்றி பேசும் சுலோச்சனா, ''எங்களது இளவயதில் ராதா கல்யாணம், சீதா கல்யாணம் என ஒரு நாள் தொடங்கி அடுத்த நாளை வரை பஜனைகளில் பங்கேற்போம். தற்போது வயது காரணமாக வெளியில் அதிகம் செல்லவது சிரமமாக உள்ளது. அதுபோன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுவது குறைந்துவிட்டது. ஸ்மார்ட்போனில் செயலிகளை தட்டினால் தேவையான பாடல்கள், பல மணிநேரங்கள் வரை கேட்கமுடிகிறது,'' என்கிறார்.
மூத்த குடிமக்களுக்கு மட்டுமல்ல இளைய தலைமுறைக்கும் ஏற்றதாக இணைய செயலிகள் உள்ளன என்கிறார் கோவையை சேர்ந்த பா.நித்யா (32).
''தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் பன்னிரு திருமுறைகள் பற்றி படிக்க தொடங்கினேன். ஆனால் எனது வேலைக்கு இடையில் கவனம் செலுத்துவது பிரச்சனையாக இருந்தது. திருவாசகம், திருப்பாவை என செயலிகள் இருப்பதால், படிப்பதற்கு மிக எளிமையாக உள்ளது,'' என்கிறார் அரசு ஊழியர் நித்யா.
செயலியில் தோன்றும் தேவார பாடல்
இந்து மதம் மட்டுமல்லாது இணையத்தில் கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கிய மதம் என பல்வேறு மதங்களுக்கான செயலிகள் காணக்கிடைக்கின்றன.
படங்கள், பாடல்கள், கதைகள், சொற்பொழிவுகள் என பல அம்சங்களை செயலிகள் கொண்டுள்ளன.
தமிழ்குரான் என்ற செயலியில் ஒரு பயன்பாட்டாளர் தனக்கு பிடித்தமான குரலில் துவா செய்யும் வசதி உள்ளது.
பலருக்கும் அவர்களுக்கு தேவையான நேரத்தில் அவர்கள் விரும்பும் சொற்பொழிவுகளை வழங்கும் விதமாக ஒரு செயலியை உருவாகியுள்ளதாக கூறுகிறார் வெல்லுக்குடி கிருஷ்ணன் என்ற சமய சொற்பொழிவாளர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாட்ஸ்ஆப் மூலம் சுமார் 75,000 நபர்களுக்கு தினமும் சொற்பொழிவுகளை அனுப்பிவந்ததாகவும், பெரும்பான்மையான நபர்களுக்கு சொற்பொழிவுகளை அனுப்புவதற்கு பதிலாக 'கின்சித்என்பனி' என்ற பிரத்தேயக செயலியை வடிவமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவீன காலத்தில் செயலியின் மூலம் நடக்கும் ஆன்மிக வழிபாடுகள் பற்றி சென்னை பல்கலைகழகத்தின் வைஷ்ணவவியல் துறையின் தலைவர் வேங்கடகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''பெரிய புத்தகங்கள், அதிமான விளக்கங்கள் தேவைப்படும் என்பதால் பலரும் ஆன்மீக பாடல்கள் மற்றும் கதைகளை தங்களாவே படிப்பதற்கு சிரமப்படுவார்கள். செயலிகள் போன்ற இணைய வசதிகளில் மிகவும் எளிதான வகையில் கருத்துக்கள் கிடைப்பது அதிகரித்துவருகிறது, ''என்றார்.
''பலருக்கும் தங்களது வாழ்க்கை முறையில் கோயிலுக்கு செல்லவும், சொற்பொழிவுகளை கேட்கவும் நேரம் இல்லை. வெளிநாடுகளில் வசிக்கும் பலருக்கும் இந்த இணைய செயலிகள் மிகவும் உதவியாக உள்ளன. எடுத்துக்காட்டாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 4,000 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம், தெளிவுரை என முழுமையாக கேட்கலாம், அதை சொல்லவும் தற்போதைய காலத்தில் நேரம் குறைவு. கற்றுத் தேர்ந்த ஒருவர் செயலியில் பதிவிட்டால் பலருக்கும் அது உதவுகிறது, '' என்றார் வேங்கடகிருஷ்ணன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்