You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`உத்தம’ பிரதேசத்தில் “இனி மூச்சு விடுவதற்கும் சிக்கல்தான்”
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 மாவட்டங்களில் பெண்களை கேலி செய்பவர்களை தடுப்பதற்காக, ரோமியோக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் அணி என்று பொருள்படும் "ஏண்ட்டி ரோமியா தல்" அமைக்க லக்னெள மண்டல காவல்துறை உயரதிகாரி சதீஷ் பரத்வாஜ் முடிவு செய்துள்ளார்.
புதன்கிழமை காலையில் உத்தரப்பிரதேச காவல்துறையினர், இந்த அணி குறித்த அனைத்து செய்திகளையும் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் ஹேண்டிலான @Uppolice இல் இருந்து வெளியிட்டனர்.
யோகி ஆதித்யநாத் முதலமைச்சரானதற்கு பிறகு, பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட "உறுதி பத்திரத்தில்" "ஏண்ட்டி ரோமியா தல்" அமைப்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்கு பிறகு காலை வேளைகளில் இந்தப்பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று உத்தரப்பிரதேச மாநில காவல்துறை உறுதியாக கூறுகிறது.
11 மாவட்டங்களில் ஒரு மாதம் வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறும் சதீஷ் பரத்வாஜ், அதன் பிறகும் இந்த திட்டம் தொடருமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இந்த குழுவை அமைத்தது தொடர்பான நடைமுறைகள் பற்றி உத்தரப்பிரதேச மாநில காவல்துறை எந்தவிதமான தகவல்களையும் தெரிவிக்கவில்லை.
செவ்வாய்க்கிழமையன்று மாலை கிடைத்த செய்திகளின்படி, பி.ஜி கல்லூரியின் வெளியே காரணமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காரணம் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கு சுற்றிக்கொண்டிருந்தவர்களின் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பகுதிகளில் சக மாணவர்களுடன், மாணவிகளை பார்த்தால், அவர்களும் பிடித்து விசாரிக்கப்படுவார்களா என்று காவல்துறையினர் தெளிவுபடுத்தவில்லை.
உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் பலர் பலவிதமான சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.
"இது தான் புதிய உத்தம பிரதேசமா? முதலில் ஜீன்ஸ் போடுவது, போன் பயன்படுத்துவது, காதலிப்பதற்கு காப் பஞ்சாயத்து மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இனிமேல், மூச்சு விடுவதற்கு கூட பயப்படவேண்டும் போலிருக்கிறது" என்று @sakshichopra5 டிவிட்டர் மூலம் சாக்ஷி தனது அச்சத்தை வெளியிட்டிருக்கிறார்.
இருந்தபோதிலும், உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு, சமூக ஊடகங்களில் பரவலான ஆதரவும் காணப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்