You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜை மாற்ற தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. கோரிக்கை
சென்னை மாநகர ஆணையராக உள்ள எஸ். ஜார்ஜ் ஆளும் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக செயல்பட்டுவருவதால், ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமென தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, மாநிலத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி , தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தற்போதைய ஆளும் அ.தி.மு.கவிற்கு, சென்னை மாநகர ஆணையர் என்ற முறையில் ஜார்ஜ் சாதகமாகச் செயல்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்கள் ஜனவரி 23-ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோது, அ.தி.மு.க தலைமையின் உத்தரவின்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா முதல்வராவதற்காக அ.தி.மு.கவின் எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டதிலும் அங்கிருந்து திரும்ப அழைத்து வரப்பட்டதிலும் ஜார்ஜ் உதவியதாகத் தெரிய வருவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, அவரது தொலைபேசி அழைப்பைக் கூட ஜார்ஜ் ஏற்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியிருப்பதாகவும், இது பணிவிதி முறைகளுக்கு மாறானது என்றும், ஜார்ஜ் அ.தி.மு.கவின் ஒரு பிரிவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதாகவும் அந்த மனுவில் தி.மு.க. குறைகூறியுள்ளது.
அ.தி.மு.க தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து இயங்கிவரும் நிலையில், ஒரு பிரிவுக்கு ஆதரவாக ஜார்ஜ் செயல்பட்டுவருவதாகவும் ஆர்.கே. நகரில் அந்தப் பிரிவுக்கு ஒத்துழைப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தி.மு.க. தனது மனுவில் கூறியுள்ளது.
ஆகவே, சுதந்திரமாக தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டுமெனத் தி.மு.க. கோரியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்