திருமணம் செய்யாமல் வாடகைத் தாய் மூலம் தந்தையாகியுள்ள பாலிவுட் இயக்குநர்

பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநரான கரண் ஜோஹர், வாடகைத் தாய் முறை மூலம் யஷ் மற்றும் ரூஹி என்ற இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

கரண் ஜோஹரின் பாலினம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், ஞாயிறன்று தனது டிவிட்டர் பக்கத்தில், மருத்துவ அறிவியலின் அற்புதம் மூலம் தான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகிருப்பதாக தெரிவித்தார்.

"இது மிகவும் உணர்ச்சிகரமானது ஆனால் அதே சமயம் நன்றாக யோசித்து எடுத்த முடிவு" என டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதாக உள்ள போதிலும், தனி நபர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது சட்டபூர்வமானதாகவே உள்ளது.

பாலிவுட் நட்சத்திர நடிகரும் கரண் ஜோஹரின் நண்பருமான ஷாருக் கானின் இளைய மகன் ஆப்ரம் 2013ஆம் ஆண்டு வாடகைத் தாய் முறை மூலம் பிறந்த குழந்தையாவார்.

கரண் ஜோஹரின் இந்த முடிவு குறித்து நடிகைகள் ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கரண் ஜோஹரின் இந்த முடிவு ஒரு துணிச்சலான முடிவு என பலரும் பாராட்டியுள்ளனர்.

கரண் ஹோர், ஓரினச்சேர்கை பற்றி வெளிப்படியான கருத்து எதுவும் தெரிவித்திராத போதிலும், சமீபத்தில் தனது சுயசரிதையில், தன்னுடைய பாலினம் அனைவருக்கும் தெரிந்ததே அதை பற்றி தான் பெரிதாக கூற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தார்.

மேலும் "என்னுடைய பாலினத்தைப் பற்றி நான் வெளிப்படையாக கூறாமல் இருப்பதற்கு காரணம் நான் வழக்குகளை எதிர்கொள்ள விரும்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பணிகள் இருக்கின்றன, எனது நிறுவனத்திற்கும் எனக்காக பணிபுரிபவர்களுக்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன். மேலும் நான் நூற்றுக்கும் மேலானவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது" என அவர் அதில் எழுதியுள்ளார்.

இந்தியாவில் தனி நபர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வர்த்தக வாடகைத் தாய் முறை, சட்டரீதியாக உள்ள போதிலும்,திருமணம் ஆகி குறைந்தது ஐந்து வருடம் குழந்தையில்லாத தம்பதியினர்களுக்கு மட்டும் என வரைமுறை விதிக்கும் சட்ட வரைவு திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்