You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விட வேண்டும் என கடந்த 14 நாட்களாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நெடுவாசல் போராட்ட குழுவினர் இன்று (புதன்கிழமை) தமிழக தலமைச் செயலகத்தில் சந்தித்து தங்ககள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெடுவாசல் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் சி. வேலு கூறுகையில், ''மக்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் முதல்வரிடம் சமர்ப்பித்தோம்'' என்று கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா என்று கேள்விக்கு பதிலளித்த சி. வேலு, ''இது தொடர்பாக எந்த ஆலோசனை கூட்டமோ அல்லது கருத்து கேட்பு கூட்டமோ நடத்தப்படவில்லை. இழப்பீட்டுத் தொகை அளிக்கிறோம் என்று கூறி பலரிடமும் அவர்களின் நிலங்களை பெற்றுள்ளனர்'' என்று சி. வேலு குற்றம்சாட்டினார்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என முதல்வர் தங்களிடம் உறுதியளித்ததாக சி. வேலு மேலும் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், அரசுத்துறைகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளிக்கவில்லை என முதல்வர் கூறியதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, தனது தில்லி பயணத்தில் பிரதமர் மோடியிடம் இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளதாக முதல்வர் தெரிவித்ததாக வேலு செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திங்கள்கிழமையன்று விளக்கமளித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலியத்துறை விளக்கமளித்த நிலையிலும், புதுக்கோட்டை நெடுவாசலில் அந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடுவோர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடத் தயாராக இல்லை. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்