You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னிந்திய நடிகை மீது பாலியல் தாக்குதல் - மூவர் கைது
தென்னிந்திய நடிகை ஒருவர் கொச்சியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கொச்சி பொலிஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருந்த அந்த நடிகையின் கார் பின் புறமிருந்து மற்றொரு வேனால் மோதப்பட்டது.
அப்போது அவரது கார் ஓட்டுநர் மார்ட்டின் காரில் இருந்து இறங்கி தங்கள் கார் மீது மோதிய வேன் ஓட்டுநரை விசாரிக்கச் சென்றபோது, வேனில் இருந்த, நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் சுனில் என்பவரும் மற்ற இருவரும், அவரது காருக்குள் நுழைந்து, மார்ட்டினை, அந்தக் காரை சிறிது நேரம் ஓட்ட வற்புறுத்தி, அந்த நேரத்தில் அந்த நடிகை மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தினர் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்தச் செயல்கள் , டில்லியில் 2012ம் ஆண்டு பாலியல் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட பாலியல் வல்லுறவு குறித்த புதிய சட்டத்தின்படி, இந்த சம்பவம் பாலியல் தாக்குதல் என்றே கருதப்படும் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில், நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின், கோயம்புத்தூரைச் சேர்ந்த வாடிவால் சலீம் மற்றும் பிரதீப் ஆகியோரும் அடங்குவர். ஆனால் முக்கிய சந்தேக நபரான சுனில் இன்னும் பிடிபடவில்லை.
மேலும் இந்தக் குழுவைச் சேர்ந்த மூவரை போலிசார் தேடி வருகின்றனர்.
கொச்சியில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிலையத்தில் நடக்கவிருந்த `டப்பிங்` ( குரல் கொடுக்கும்) வேலைக்காக அந்த நடிகை சென்று கொண்டிருந்தார்.
இந்தக் கார் , அந்த்த் திரைப்பட தயாரிப்பு நிலையத்துக்குச் சொந்தமானது. மார்ட்டினும் அந்த தயாரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர். சுனிலும் முன்பு அந்த திரைப்பட நிலையத்தில் பணி புரிந்தவர். ``இப்படித்தான் இந்த சதி உருவாக்கப்பட்டது என்று நாங்கள் புரிந்து கொள்கிறேம்``, என்று பிபிசியிடம் பேசிய ஒரு போலிஸ் அதிகாரி கூறினார்.
வேறு பலரிடமும் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் போலிசார், பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல், கிரிமினல் சதி, தவறாக தடுத்துவைப்பது போன்ற இ.பி.கோ சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குகளை பதிந்துள்ளனர்.
சுனில் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. ஒரு முன்னாள் நடிகை, தனக்கு இழைக்கப்பட்ட ஒரு பாலியல் தொந்தரவு குறித்து தான் கொடுத்த புகாரின் மீது எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
கேரள திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த சம்பவம் குறித்து தங்கள் கண்டனங்களைப் பதிந்திருக்கின்றனர்.
மலையாள நடிகர் மோகன்லால் , மஞ்சு வாரியர், கீது மோகன் தாஸ் போன்றோர் சமூக வலை தளங்களில் இது குறித்து கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.